2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

Year Ender 2022: தேசிய அளவில் கவனம் ஈர்த்த 10 நிகழ்வுகள்! – Tamil Samayam

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டையொட்டி, வைஷ்ணவி தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பக்தர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்கப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் புதிய தளபதியை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. அதனடிப்படையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டார். 1981ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரைபிள்ஸ் படைப் பிரிவில் பணியில் சேர்ந்த அனில் சவுகான், 2021ஆம் ஆண்டு ராணுவத்தின் கிழக்குப் பகுதி கமாண்டராக பணியில் இருந்தபோது ஓய்வு பெற்றார். இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநராகவும், ஐ.நா. சபை திட்டங்களிலும் பணியாற்றி உள்ளார்.
குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்முவும், குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கரும் பொறுப்பேற்றனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின வகுப்பை சேர்ந்த திரவுபதி முர்மு, அரசு ஊழியராக இருந்து, கவுன்சிலராக தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக (2015-2021) பதவி வகித்து ஓய்வு பெற்ற நிலையில், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசு தலைவராக பதவியேற்றார். அதேபோல், மேற்குவங்க ஆளுநாரக இருந்த ஜக்தீப் தன்கர் ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்றார்.
பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பேரணியில் உரையாற்றுவதாக இருந்தது. அதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரதமர் சென்ற வழியில், போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர். இதன் காரணமாக மேம்பாலம் ஒன்றில் 15 முதல் 20 நிமிடம் வரை பிரதமர் மோடியின் கான்வாய் வாகனம் சிக்கியது. இதையடுத்து, நிகழ்ச்சிகளை ரத்து செய்த பிரதமர் மோடி, மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பி சென்றார். இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, தனது கணக்கை டெல்லியை தாண்டி அண்டை மாநிலத்தில் தொடங்கியது. அதேபோல், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோலோட்சி வந்த பாஜகவின் அதிகாரத்திற்கு ஆம் ஆத்மி கட்சி முற்றுப்புள்ளி வைத்தது. இதேபோல், குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெற்றன.
அதில், 24 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. குஜராத் மாநிலத்தில் 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதுவே அதிக தொகுதிகளில் ஒரு கட்சி அம்மாநிலத்தில் வெற்று பெற்ற வரலாற்று சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 2022 தேர்தலில் பாஜக முறியடித்தது.
தேசிய கட்சி என்றால் என்ன? மகிழ்ச்சியில் ஆம் ஆத்மி!

அதேசமயம், இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1985ஆம் ஆண்டு முதலே அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. கடந்த 37 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு அம்மாநில மக்கள் வாக்களித்ததில்லை. அந்த வகையில், 2022 தேர்தலிலும் இமாச்சல் வாக்காளர்கள் அவர்களின் பாரம்பரியத்தை கட்டி காப்பாற்றினர்.
டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்து விட்டது. இதனை தொடர்ந்து டெல்லி குடியரசு தின கொண்டாட்டங்களில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படன. அவை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது மக்கள் பார்வைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பாஜக ஆளாத மாநிலங்களான கேரளா, மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் அலங்கார ஊர்திகளையும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிராகரித்தது.
கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிப்ரவரி 5ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாபுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஹிஜாபுக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹிஜாப் அணிய தடை விதித்த அரசாணை செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து 6 மாணவிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. 1927ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதன்முறையாக இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்றது. உக்ரைன் போர் காரணமாக, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சிகளின் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில், பங்கேற்ற வீரர்கள் தமிழகத்தில் விருந்தோம்பலுக்கு புகழாரம் சூடினர். செஸ் ஒலிம்பியாட் போட்டியால் உலகம் தமிழகத்தி திரும்பிப் பார்த்தது.
ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் டில்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து உலக அளவில் சர்ச்சையாகியது. முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பின. இதையடுத்து, அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டது.

source