
Save the vikatan web app to Home Screen tap on
வழக்கமாக தாதா என்றால் மதுரை என்றே வரும் படங்களுக்கு மத்தியில் ‘மதுரைக்கு மிக அருகில் திண்டுக்கல்' என்று யோசித்ததையே பொன்ராம் புதுமை என்று நம்பியிருக்கிறார்.
தன்னைத் துரத்தும் தாதாவைப் பழிதீர்ப்பதற்காக சாமானியன் போலீஸ் அவதாரம் எடுப்பதுதான் இந்த டி.எஸ்.பி.
திண்டுக்கல்லில் பூக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவரான இளவரசின் மகன் விஜய் சேதுபதி ஜாலியும் கேலியுமாய் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அரசாங்க வேலை வாங்கித் தரும் முயற்சியில் தந்தை இளவரசு. தன் தங்கை திருமண நாளில் ஊரையே மிரட்டி வைத்திருக்கும் தாதா பாகுபலி பிரபாகர்மீது கை வைத்துவிடுகிறார் விஜய் சேதுபதி. ‘உன் மகனின் தலையை எடுத்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் வைப்பேன்’ எனக் கொடூர சபதம் செய்கிறார் தாதா. அவரிடமிருந்து மகனைக் காப்பாற்ற வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார் இளவரசு. வெளியூர் போன விஜய் சேதுபதி டி.எஸ்.பி ஆகிவிட… தாதா மட்டும் தக்காளித் தொக்கா..? அவரும் எம்.எல்.ஏ ஆகிவிடுகிறார். MLA Vs DSP ஆட்டம் என்ன ஆனது என்னும் பழைய கதையை பழைய்ய்ய்ய பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதியின் உடுப்பில் தெரியும் மிடுக்கு, போலீஸின் சாகசங்களிலும் சாதுர்யங்களிலும் இல்லை. நாயகி அனு கீர்த்தி வாஸ்ஸுடனான காதல் காட்சிகள் திரைக்கதை ஓட்டத்துக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் தொல்லை.
நகைச்சுவைக்கு சிங்கம்புலி, புகழ், தீபா சங்கர், கு.ஞானசம்பந்தம் எனப் பலர் இருந்தும், அவர்கள் யாரும் காமெடிக்குக் கை கொடுக்கவில்லை. கௌரவத் தோற்றத்தில் வரும் விமலும், காமெடி என்கிற பெயரில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார். ஆரம்பத்தில் மிரட்டும் பாகுபலி பிரபாகரின் வில்லத்தனம், சிறிது சிறிதாகக் கரைந்து, இறுதிக்காட்சியில் பரிதாப வில்லனாக மாறுகிறார். பாசக்கார அப்பாவாகவும், பரிதவிக்கும் அப்பாவாகவும் இளவரசு மட்டுமே ஆறுதல் தருகிறார்.
இமான் பின்னணி இசையில் பதற வைக்கிறார். வெங்கடேஷ்.எஸ் மற்றும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் அலுப்பூட்டும் திரைக்கதைக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
வழக்கமாக தாதா என்றால் மதுரை என்றே வரும் படங்களுக்கு மத்தியில் ‘மதுரைக்கு மிக அருகில் திண்டுக்கல்’ என்று யோசித்ததையே பொன்ராம் புதுமை என்று நம்பியிருக்கிறார். அதனால் ஒரு டெம்ப்ளேட்டைக்கூட மாற்றாமல் சலிப்பூட்டும் திரைக்கதையில் ஏமாற்றியிருக்கிறார். முதல் பாதியில், சாமானியனுக்கும் தாதாவிற்கும் இடையேயான மோதல், இரண்டாம் பாதியில் போலீஸுக்கும் எம்.எல்.ஏ-வுக்கும் இடையேயான மோதலாக மாறுகிறது. ‘விஸ்வரூபம்’ எடுத்திருக்க வேண்டிய இரண்டாம் பாதி, நம்பகத்தன்மையே இல்லாத காட்சிகளால் ‘தூங்காவன’மாக மாறி அலுப்பைத் தருகிறது.
விஜய் சேதுபதியிடம் அடிக்கடி, ‘நீங்க போலீஸ்தான’ என யாராவது ஒருவர் கேட்டு ஞாபகப்படுத்துகிறார்கள். அதேபோல், ‘இது காமெடிதான’, ‘இது ரொமான்ஸ்தான’, ‘இது ட்விஸ்ட்தான’ என ஒருவர் கேட்டு நமக்கு உதவியிருக்கலாம்.
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan