2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

2 அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரம்; விரைவில் ஊழல் பட்டியல்: திருச்சியில் அண்ணாமலை பேட்டி – Indian Express Tamil

Indian Express Tamil
திருச்சியில் இன்று (சனிக்கிழமை) பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தமிழக ஆளுநரைச் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பா.ஜ.க.,வின் தீர்க்கமான கருத்து ஆன்லைன் விளையாட்டுக்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய அபாயம் இருக்கிறது. கடந்த முறை நான் ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்தபோது, அவரிடம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை விரைவில் தடை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜ.க சார்பில் என்னுடன் வந்த தலைவர்களும் வலியுறுத்தினோம். மாநில அரசுடன் அதுதொடர்பான விளக்கத்தைக் கேட்டு சரிசெய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள்: கேக் வடிவில் மு.க.ஸ்டாலின்… திருச்சியில் அசத்திய பேக்கரி உரிமையாளர்
இந்த விவகாரத்தில் மத்திய அரசு பட்டியலில் உள்ள 31-வது பிரிவு அதிகாரத்தை மாநில அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. அதை பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாது. சைபர் ஸ்பேஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது, அதில் மாநில அரசு சட்டம் இயற்றுகின்றனர். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனவே, வல்லுநர் குழுவைக் கொண்டு சரி செய்ய வேண்டும் என்று கூறினோம். ஆளுநர் தரப்பில் இருந்து என்ன சொன்னார்கள் என்று, அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். இதுதான் எங்களுக்குத் தெரியும்.

ஆளுநரை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்கள் ஏன் சந்தித்தனர், இந்தச் சந்திப்பினால் ஆளுநரின் மனது மாறப்போகிறதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆன்லைன் விளையாட்டுக்கள் தமிழகத்தில் முறைப்படுத்தப்பட வேண்டும். தடை செய்ய வேண்டும். பிராக்ஸி சர்வரைப் பயன்படுத்தி விளையாடினால் என்ன செய்வது. இது ஒரு சிக்கலான பிரச்சினை. எனவே, இந்த விவகாரத்தில் வேகமாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், லாலு பிரசாத் ஊழல்வாதி தான். ஆனாலும் அவர் திறமை வாய்ந்த அரசியல் தலைவர். அவரது மனைவி முதல்வர், மகன் துணை முதல்வர் என குடும்பத்தினரே பதவிகளை ஆக்கிரமித்தனர். ஒருவருடைய அரசியல் வாழ்க்கை மண், மக்கள் நலம் சார்ந்து இருக்க வேண்டும் அவ்வாறு இல்லையெனில் அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியம் ஆகிவிடும். இதற்கு லல்லு பிரசாத் உதாரணமாகிவிட்டார். தமிழகத்திற்கும் இது பொருந்தும்.
காவி நிறம் பா.ஜ.க.,வுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதனை பா.ஜ.க சொந்தம் கொண்டாடவில்லை. பா.ஜ.க நிறம் காவிதான் என வி.சி.க தான் கூறி வருகிறது. காவி நிறம் பொதுவானது காவியை நேசிப்பவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள் என்று அண்ணாமலை கூறினார்.

தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் வெளியீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை, “இன்னும் கொஞ்ச நாட்களில் அடுத்தக்கட்ட பட்டியலை வெளியிடப்போகிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆரம்பத்தில் பா.ஜ.க சார்பில் ஊழல் என்றபோது, நாங்கள் மட்டும் குற்றம்சாட்டுவதாக கூறப்பட்டது. 6 மாதங்களுக்குப் பிறகு, இன்று சாமானிய மக்கள் பேசும் அளவிற்கு ஊழல் பெருகியிருக்கிறது. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பொறுப்புள்ள கட்சியாக செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். அடுத்தக்கட்ட பட்டியலை நாங்கள் வெளியிட இருக்கிறோம். இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்; அமைச்சர் பதவியை யாருக்கு வேண்டுமானாலும் வழங்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு. தி.மு.க.,வில் ஏற்கனவே குடும்ப ஆட்சி தான் என கூறி வருகிறோம். கனிமொழிக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உதயநிதிக்கும் பதவி வழங்கப்பட உள்ளது. இது குடும்ப ஆட்சி தான் என்பதை உணர்த்துகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மாவட்டத் துணைத் தலைவர் ஜெய கருணா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
Web Title: Bjp leader annamalai says ministers corruption list will release soon at trichy

source