2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

மருத்துவ சேவையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது -மேகாலயா மந்திரி புகழாரம் – தினத் தந்தி

சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மேகாலயா மாநிலத்தில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிப்பது தொடர்பாக அந்த மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது.
இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேகாலயா மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஜேம்ஸ் பி.கே.சங்மா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
2 நாள் சுற்றுப்பயணம்
மேகாலயா மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஜேம்ஸ்பி.கே.சங்மா மற்றும் அவரது குழுவினர் 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறப்பு மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டு, அதனை அவர்களது மாநிலத்தில் செயல்படுத்த வந்துள்ளனர்.
மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மற்றும் தமிழகத்தில் சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளையும் பார்வையிட உள்ளனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள உயர் மருத்துவ சேவைகளான ‘ரோபாடிக்’ அறுவை சிகிச்சை, புற்றுநோய் உயர் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற திட்டங்களையும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக கிடங்கு ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.
மேகாலயாவில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தை நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி ஆகிய சிறப்பு பயிற்சிகள் அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
தமிழகத்தில் நேற்று மட்டும் 368 பேர் ‘இன்புளுயன்சா’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 42 பேரும், 5 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும்.
எனவே பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பெற்றோர்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, காய்ச்சல் சரியாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்து விளங்குகிறது
இதையடுத்து மேகாலயா மந்திரி ஜேம்ஸ் பி.கே.சங்மா பேசுகையில், ‘இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடைய முடியும். மேகாலயா மாநிலத்தில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவிகரமாக அமையும். இந்தியாவிலேயே மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் செயல்பாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது’ என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேசிய சுகாதார குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மேகாலயா மாநிலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் சம்பத்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)

source