2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

மகிழ்வான வாழ்வருளும் மாலோலன்! – தினகரன்

பிரகலாதனின் பக்திக்காக தூணைப்பிளந்து எழுந்தருளிய சிங்கப்பிரானது கோயில் ஒன்று, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. ‘தென் அஹோபிலம்’ என்று கொண்டாடப்படும் பூவரசன் குப்பம் எனும் திருத்தலம்தான் அது. நரசிம்ம அவதாரம் என்பது தர்மம் நலிவடைந்த வெவ்வேறு காலகட்டங்களில், அதனைக் காக்கும் பொருட்டு, மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் முக்கியமான ஒன்று. ஒருபுறம் நான்முகனிடம் ‘நிரந்தர வாழ்வு’ என்ற வரத்தினை பெற்ற கொடூர அரக்கன் ஹிரண்யகசிபுவின் அட்டகாசங்கள், மறுபுறம், தனது தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே மந் நாராயணனின் பக்தனான ஹிரண்யனின் மகன் பிரஹலாதன்.

அக்கிரமங்கள் புரியும் கொடூரமான அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தர்ம சிந்தனை உடையவன் பிரஹலாதன். மந் நாராயணனே உயர்ந்தவன் என்று அவன்பால் பக்தியினை உடையவன். தானே அனைவரை விடவும் உயர்ந்தவன் என்ற மதை மிகுந்தவன் ஹிரண்யன். தன் மகனாக இருந்தாலும் ஹரியின் பெயரை உச்சரிப்பதால், கோபமுற்ற ஹிரண்யன், அவனை மலையில் இருந்து தள்ளிவிட்டான், ஆழ்கடலில் மூழ்கடித்தான். யானையை விட்டு மிதிக்கச் செய்தான்.

ஆனால் பிரஹலாதன் மீண்டும் உயிர் பெற்று வந்தான். இதனால் மிகவும் கோபம் ெகாண்ட ஹிரண்யன் தன் தங்கை பெற்ற வரத்தினைக் (நெருப்பு எதிர்காக்கும்) ெகாண்டு பிரஹலாதனை தன் தங்கையின் மடியில் வைத்துக் கொள்ள, தீ மூட்டினான். பிரஹலாதன் கண்களை மூடி மந் நாராயணனை த்யானம் செய்ய, மூட்டப்பட்ட தீயில் ஹிரண்யனின் தங்கை சாம்பலாகிவிட, பிரஹலாதன் ஒரு சிறு காயம் இல்லாமல் தியான நிலையில் அப்படியே  இருக்கின்றான்.

ஹிரண்யனுக்கு அளவிலடங்கா கோபம் மூண்டது. பிரஹலாதனை தானே அழிக்க முடிவு செய்தவன், ‘எங்கே உன் மாயாவி?’ என்று தன் மகனிம் கேட்க, ‘எங்குமுள்ளான்  என் ஹரி’ என்றான் பிரஹலாதன். அரண்மனை தூணிலும் இருப்பான் என்று பிரஹலாதன் கூற அதை ஹிரண்யன் பிளக்க உள்ளிருந்து நரசிம்ம வேடம் தரித்து மந் நாராயணன் உக்கிரமாக வெளிவந்து ஹிரண்யனை வதம் செய்கிறார்.

கொடுமைகள் புரிந்த ஹிரண்யனின் அக்கிரமங்களுக்கு அஞ்சி, அவனது ராஜ்ஜியத்தை விட்டு சென்ற முனிவர்கள், சிங்கமுகத்தோனின் தரிசனம் கிடைக்கவில்லை என்ற தங்களின் குறையினை சப்தரிஷிகளான ஜமதக்னி, அத்ரி, பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், காச்யபர் மற்றும் கௌசிகர் அவர்களிடம் சொல்லி நாராயணன் நரசிம்ம அவதாரம் அருள் பாலிக்க வேண்டி தவமிருந்தனர். சிங்க முகத்தோன் அவர்களது தவத்தினை மெச்சி தோன்றிய கோயில்கள் பூவுலகில் எட்டு நரசிம்ம ஸ்தலங்களாக அமைந்துள்ளன. பூவரசங்குப்பம், அந்திலி, பரிக்கல், சிங்கரி கோவில், நாமக்கல், சிங்கப் பெருமாள் கோவில், சோளிங்கர் மற்றும் சிந்தலவாடி ஆகியவை ஆகும். இவற்றுள் ‘பூவரசன் குப்பம்’ என்று அறியப்படும் ‘பூவரச மங்கலம்’ வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு வைணவத் திருத்தலமாக திகழ்கிறது.

சமண ஆதிக்கம் மிகுந்திருந்த ஏழாம் நூற்றாண்டில், முதல் பல்லவ மன்னன், சைவ மற்றும் வைணவ மதங்களை அழிக்க சபதம் பூண்டு பல கோவில்களை இருந்த இடம் தெரியாமல் அழித்தான். அந்தக் காலகட்டத்தில் அவனது ராஜ்யத்தில் வாழ்ந்த நரஹரி என்ற வைணவ ரிஷியானவர் பல்லவ மன்னனை எதிர்த்துக் குரல் கொடுக்க, அவரைக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்தான். இதனால் சினமுற்ற நரஹரி, ‘என்னைக் கொல்லத் துணிந்த உனக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகட்டும். உன் உடல் முழுவதும் அழுகி சீழ் பிடித்து, புழுக்கள் உண்டாகி நீ துன்பப்படுவாயாக’ என்று சாபமளித்தார்.

நரஹரியின் சாபமும் பலித்தது. இதனால் மனம் வெதும்பி தனது நாட்டை விட்டே வெளியேறிய மன்னன், தென்பெண்ணையாற்றின் வடக்கே ஆற்றங்கரையில் ஒரு பூவரச  மரத்தினடியில் வலி மிகுதியால் களைப்புடன் படுத்திருந்தான். அவன் மீது பூவரச இலை ஒன்று விழ, அதை எடுத்தவன், அந்த இலையில் தெரிந்த நரசிம்ம பிரானின் திருமுகத்தினைக் கண்டு மனம் நெகிழ்ந்து, மனமுருகி நின்றான் மன்னன்.

சிங்கப்பிரான் அசரீரியாக தோன்றி பல கோயில்களை இடித்த பாவத்திற்கு பிராயச் சித்தமாக, பூவரச மரத்தினடியிலேயே தனக்கு ஒரு கோயிலை எழுப்ப மன்னனை பணித்தார். அவ்வாறு மன்னன் கோயில் கட்டும் இடமானது, பூவரசமங்கலம் என்று பெயர் பெற்ற புண்ணியத் தலமாக விளங்கும் என்று கூறி மறைந்தார். அசரீரியின் ஆணைப்படி மன்னன் கோயில் கட்ட முனைந்த அந்த நிமிடம் அவனது சாபங்கள் நீங்கி அவனது உடல்நிலை பழைய நிலைக்கு மாறியது. சிங்க முகத்தோனுக்கு பூவரச மங்கலத்தில் கோயில் உண்டானது.

மற்றொரு காலகட்டத்தில், விஜயநகர சாம்ராஜ்ய அரசன் ஒருவன், பகைவரின் சூழ்ச்சியால் ராஜ்ஜியத்தை இழந்து நிர்கதியாக நின்றபோது, பகைவரிடமிருந்து தப்பிக்க எண்ணி இந்த கோயிலுக்குள் தற்செயலாக நுழைந்தான். கோயிலினுள் சிங்கப் பிரானையும், தாயாரையும் கண்டு மனமுருகி அவர்களது திருவடிகளில் விழுந்து வணங்கி தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டினான். மனமிரங்கிய சிங்கப்பிரான், அவனது பகைவரின் சூழ்ச்சிகளை முறியடித்து, ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்ததாக ஓலைச் சுவடிகள் கூறுகின்றன.

இத்திருக்கோயிலில் சிங்கப்பிரான் நான்கு கைகளோடு காட்சி தருகிறார். லட்சுமி நரசிம்ம ரூபம் என்பதினால் சிங்கப்பிரானின் இடது தொடையில் லட்சுமி பாந்தமாக அமர்ந்த வண்ணம் தரிசனம் நல்குகின்றாள். தாயார் லட்சுமி அமர்ந்திருக்கும் திருக்கோலம், அவள் பக்தர்களாகிய நம்மை ஒரு கண் கொண்டு பார்ப்பது போலவும், மற்றொரு கண்ணால் தனது மனம் கவர்ந்த சிங்கமுகத்தோனைக் காண்பது போலவும் அமைந்துள்ளது. அமிர்தவல்லி என்ற பெயரினைக் கொண்டு சிங்கப்பிரானுடன் இத்தலத்தில் காட்சி அளிக்கும் தாயார், இறப்பில்லா வரம் அளிக்கும் அமிர்தத்தையும் வரமாகத் தர வல்லவள்.

இக்கோயிலின் தலமரம் ‘நெல்லி மரம்’. தீர்த்தமானது ‘சக்கர தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி இந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் நரசிம்ம ஜெயந்தி திருநாளன்று நரசிம்ம பிரானுக்கு ஸஹஸ்ர கலச திருமஞ்சனம் செய்விக்கப்படுகின்றது.வைகுண்ட ஏகாதசியன்று, ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி, வைகாசி மற்றும் தை மாதங்களில் உற்சவங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இரண்டு கால பூஜைகள் நடக்கும் இத்திருத்தலத்தில் அனுதினமும் அன்னதானம் நடைபெறுகின்றது. பிரதோஷ காலங்களிலும் சிங்கப் பிரானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சப்த ரிஷிகளின் தவத்தினை மெச்சி, அவர்களது ஆசைக்கிணங்கி சிங்கப்பிரான் சாந்தமூர்த்தியாக அருட்பாலிக்கும் தலம் என்பதால், மனதில் உண்மையான பக்தியுடன் வேண்டப்படும் அனைத்து ஆசைகளும் இந்தக் கோயிலுக்கு வந்தால் நிறைவேறுகிறது என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. முக்கியமாக திருமணத்தடை நீக்கும் தலமாக திகழ்கிறது. உடற் பிணிகளால் அவதிப்படுபவர்கள், பிரதி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தன்று திருத்தலத்தில் நடத்தப்படும் தன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டு, நோய்களிலிருந்து மீளலாம்.

பில்லி, சூனியம், மந்திரம், ஏவல் மற்றும் துர் ஆத்மாக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பிரதி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தன்று இந்த ஆலயத்தில் நடத்தப்படும் சுதர்சன ஹோமத்தினில் கலந்து கொண்டு, இவற்றின் பிடியிலிருந்து மீளலாம்.பூவரசமங்கலம் சிங்கப்பிரான் கோவிலானது விழுப்புரம், புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சிங்கப்பிரானை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

விழுப்புரம் பண்ருட்டி சாலை வழியே வருபவர்கள், கள்ளிப்பட்டி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து இத்தலத்திற்குச் செல்ல நேரடியான பேருந்து வசதிகளும் உள்ளன. இம்மாதம் 15ம் தேதி, நரசிம்ம ஜெயந்தி அன்று சிங்கப்பிரானை தரிசித்து எல்லா வளமும் பெறுங்கள்.

மகி

source