2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

பேட்டைக்காளி விமர்சனம்: ஜல்லிக்கட்டு பின்னணியில் சாதி ஆதிக்க அரசியல் – முதல் 2 எபிசோடுகள் எப்படி? – Vikatan

Save the vikatan web app to Home Screen tap on
தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு என்றாலும் அதற்குள் இருக்கும், இதுவரை சொல்லப்படாத ஆதிக்க அரசியலை அம்பலப்படுத்தியதற்காகவே இயக்குநர் ல.ராஜ்குமாரையும், தயாரிப்பாளர் வெற்றிமாறனையும் கொண்டாடலாம்.
தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு என்றாலும் அதற்குள் இருக்கும், இதுவரை சொல்லப்படாத ஆதிக்க அரசியலை அம்பலப்படுத்தியதற்காகவே இயக்குநர் ல.ராஜ்குமாரையும், தயாரிப்பாளர் வெற்றிமாறனையும் கொண்டாடலாம்.
சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறையைச் சுற்றியிருக்கும் பகுதிதான் கதைக்களம். தாமரைக்குளத்துப் பண்ணையில் விவசாய கூலிக்காரர்களாகத் தலைமுறை தலைமுறைகளாக வேலை செய்து கரடாக இருந்த நிலங்களை கடும் உழைப்பால் கழனியாக மாற்றுகின்றனர் முல்லையூர் மக்கள். ஒரு கட்டத்தில் சுயமாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு, தாங்கள் உருவாக்கிய நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் ஒரு சிறு பகுதியைப் பிரித்துத் தரச்சொல்லி, பண்ணையாரிடம் கேட்கிறார்கள். தன்னிடம் அடிமையாக வேலை செய்த தொழிலாளிகள், முதலாளிகள் ஆவதை விரும்பாத பண்ணையார் நிலங்களைப் பிரித்துக்கொடுக்க மறுத்துவிடுகிறார். அவருக்குப்பிறகு, அவரது வாரிசு மணிசேகர பண்ணையாரும் மறுத்துவிடுகிறார். இதனால், அங்கிருந்து வெளியேறி கிடை மாடு வளர்த்து முன்னேறி வருகிறார்கள் முல்லையூர் மக்கள். அந்த மாடுகளே அம்மக்களின் சொத்தாகவும் வாழ்வாதாரமாகவும் மாறிவிடுகின்றன.
பஞ்சம் தீர்ந்து மேம்பட்டுவிட்டோம் என்று ஆறுதல் அடைந்துகொண்டிருக்கும்போதுதான், நிலத்தைப் பிரித்துக்கொடுக்காமல் விரட்டியடித்த மணிசேகர பண்ணையாரின் மகன் செல்வசேகர பண்ணையார் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை வடிவில் மீண்டும் கொம்பு சீவிக்கொண்டு ரத்த வெறியோடு ஓடிவருகிறது பகை. இம்முறை நிலத்தால் அல்ல, சாதி ஆதிக்கத்தால்! முல்லையூர் மக்கள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று தடைபோடும் சூழலில், அப்பகுதியைச் சேர்ந்த கலையரசன் பண்ணையாரின் காளையை அடக்கி விடுகிறார். இதனால், இரண்டு ஊருக்கும் மீண்டும் எப்படிப் பகை மூள்கிறது, அதற்குப்பிறகு, என்னென்ன சம்பவங்கள் நடக்கின்றன என்பதுதான் ‘பேட்டைக்காளி’ வெப் சீரிஸின் முதல் இரண்டு எபிசோடுகள் சொல்லும் கதை.
“மாடுபிடிக்கிறது ஒரு சொகம். 56 மெடல் வாங்கியிருக்கேன்” என்று உடல் காயங்களைக் காண்பித்து கெத்தாகத் திரியும் இளைஞனாக இயல்பான உடல்மொழியால் சீறியிருக்கிறார் கலையரசன். “கவர்மெண்டுக்கு நிலத்தைத் தூக்கிக் கொடுத்தாலும் கொடுப்பேன். ஆனா, காலம் முழுக்க நமக்காக கால் காணி நிலம்கூட தரமாட்டேன்னு சொன்னவனுங்கடா அவனுங்க. நம்மை சமம்னு நினைக்கிறவன் கீழக்கூட நாம இருக்கலாம். ஆனா, நம்மளை சாக்கடைன்னு நினைக்கிறவனை ஏறி மிதிக்கணும்டா” என்று கலையரசன் பேசும் ஒவ்வொரு வசனமும் கவனிக்க வைக்கின்றன.
பதுங்கிப் பாய்ந்து, கூர்மையான பார்வையால் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் கிஷோர். அக்கா மகன் கலையரசனைக் கண்டிக்கும்போது கண்களில் வெளிப்படும் பாசம், தன் மக்களின் மீது வைத்திருக்கும் நேசம் என நெகிழவைக்கிறார். அதேநேரத்தில், பழிக்குப் பழிதீர்க்க எரிமலையாய் வெடித்துச் சிதறும் கோபம் என ரௌத்திரம் ஆடுகிறார்.
”ஏய்… கொம்ப நல்லா கூறா சீவு. குத்தினா கொடல் தெறிக்கணும். நம்ப வெள்ளையன தொட்டு பார்க்குற ஆசைகூட வாடியில நிற்குற எவனுக்கும் வரக்கூடாதுடா” என்ற ஆதிக்க திமிரோடு வலம் வந்துகொண்டிருக்கும் செல்வசேகர பண்ணையாராக வேல.ராமமூர்த்தி. கதைக்குத் தேவையான ஆதிக்க மனோபாவத்தை அப்படியே பிரதிபலிக்கும் முகமாகவே வேல.ராமமூர்த்தியின் நடிப்பு உள்ளது என்றாலும், அதில் ஆங்காங்கே ஒரு அதீத செயற்கைத்தனம் மேலோங்குகிறது.
ஒரு வெப் சீரிஸ் பார்ப்பதுபோன்ற உணர்வே இல்லாமல் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை அள்ளிக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள் இயக்குநர் ல.ராஜ்குமாரும், தயாரிப்பாளர் வெற்றிமாறனும். தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு என்றாலும் அதற்குள் இருக்கும், இதுவரை சொல்லப்படாத ஆதிக்க அரசியலை அம்பலப்படுத்தியதற்காகவே இந்த இருவரையும் கொண்டாடலாம். அதேபோல, வளர்க்கப்படும் மாடுகளைத் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவே பாவித்து, கிராம மக்கள் கதறி அழுவதையும் காட்சிப்படுத்தியிருப்பது, ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டின் வீச்சையும், அது தொடர்பான உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றது.
பெரும் சமுத்திரத்தைப்போல ரௌத்திரங்களையும் ரணங்களையும் இதயத்தில் சேமித்து வைத்திருக்கும் வேல ராமமூர்த்தியின் இளம் மனைவி, மர்ம புன்னகையால் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார். அடுத்தடுத்து அரங்கேறவிருக்கும் சம்பவங்களில் இவரின் பங்கும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
‘அசுரன்’ படத்தை அடிக்கடி நினைவூட்டும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, வேல.ராமமூர்த்தியிடம் கலையரசன் மன்னிப்புக்கேட்கச் செல்லும்போது இப்படித்தான் நடக்கும் என்று பார்வையாளர்களை முன்கூட்டியே யூகிக்கவைத்துவிடுவது, இவர் இந்த கதாபாத்திரத்தில்தான் நடிப்பார் என்று பழகிப்போனது, அப்பாவின் இடத்திற்கு மகன் வர ஆசைப்படுவது என இரண்டு எபிசோடுகளில் வழக்கமான க்ளிஷேக்களும் நிறையவே இருக்கின்றன.
ஆதிக்கம், வஞ்சம், பகை, வீரம் எனப் பல விஷயங்களைத் தொட்டிருக்கும் இந்த சீரிஸில் இரண்டு எபிசோடுகளுக்குள்ளாகவே கதை உச்சத்தை அடைந்த உணர்வும் வருகிறது. அடுத்து என்ன என்ற ஆர்வம் இரண்டாம் எபிசோடின் முடிவில் மிஸ்ஸிங்.

source