2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

புரூஸ் லீ மர்ம இறப்புக்கு இதுதான் காரணமா… 49ஆண்டுகள் கழித்து வெளியான ஆய்வு முடிவுகள் – News18 தமிழ்

பிரபல தற்காப்பு கலை ஜாம்பவானும் நடிகருமான புரூஸ் லீ மரணமடைந்து 49 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது இறப்புக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க- ஹாங்காங் நடிகரான புரூஸ் லீ நவம்பர் 27, 1940 ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். Martial arts எனப்படும் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கிய புரூஸ் லி திரைத்துறையிலும் நுழைந்து கால் பதித்தார். ஃபிஸ்ட் ஆப் ஃப்யூரி,  தி பிக் பாஸ், தி வே ஆஃப் ட்ராகன் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.
அவரது இறப்புக்கு பின்னர் வெளியான எண்டர் தி டிராகன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் சக்கை போட்டது. தற்காப்பு கலையின் உச்சமாக இத்திரைப்படம் அந்த காலத்தில் கருதப்பட்டது.
திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும்போதே, ஜூலை 20, 1973ம் ஆண்டு புரூஸ் லீ மர்மமான முறையில் இறந்துபோனார். வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் பெருமூளை வீக்கம் ஏற்பட்டு அவர் இறந்துபோனார் என்று மருத்துவர்கள் நம்பி வந்தனர்
அதேவேளையில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவரை பிடிக்காதவர்கள் விஷம் வைத்து புரூஸ் லீயை கொலை செய்துவிட்டனர் என்றும் மறுபக்கம் நம்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் தொடர்பாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.ஸ்பெயினில் சிறுநீரக நிபுணர்கள் குழு நடத்திய இந்த ஆய்வு முடிவுகள் கிளினிக்கல் கிட்னி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு முடிவுபடி, புரூஸ் லீ இறப்புக்கு ஹைபோநட்ரீமியா காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹைபோநட்ரீமியா என்பது அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள சோடியம் அளவு குறைவது ஆகும்.
அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற அவரது சிறுநீரகங்களால் இயலாததால் புரூஸ் லீ மரணம் அடைந்திருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் கூருகின்றன.
தண்ணீரை போல் இருங்கள் என் நண்பர்களே என்பது புரூஸ் லீயின்  புகழ்பெற்ற வாசகம். ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகியதே அவரது இறப்புக்கு காரணமாக இருந்துவிட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

source