2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

பாட்டில் இருக்கும் சங்கதி- பாலிவுட்டை கவர்ந்த தமிழ் திரை இசை – Maalaimalar தமிழ்

நம்ம தொடரில் ஒவ்வொரு கதையையும் கேட்கும் போது சுவாரசியமாக இருக்கிறது அல்லவா? நம்ம எல்லோரும் என்ன நினைக்கிறோம்..? எல்லா பாட்டுகளும் ஏதோ வானத்தில் இருந்து குதித்து வந்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சங்கீத மும்மூர்த்திகளுக்கு வேண்டுமானால் அப்படி நடந்திருக்கலாம். ஆனால் திரையிசையில் அப்படியல்ல. ஒவ்வொரு பாட்டும் ஏதோ ஒரு தூண்டுதல் உணர்வில் தான் உருவாகி இருக்கிறது.
பேசும் படங்கள், ஆங்கிலத்தில் தான் முதன் முதலில் வெளிவந்தன.அப்புறம் இந்தியில் வெளிவந்தன. அதற்கு அப்புறம் தான் தமிழில் பேசும் படங்கள் வெளிவந்தன.
அந்த காலகட்டத்தில் அதாவது 1930-40களில் பார்த்தீர்கள் என்றால், இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் தான் படங்கள் வெளியாகும். ஒரு கட்டம் கடந்து 1950களில் தமிழிலும் தெலுங்கிலும் சேர்ந்து தான் படங்கள் வெளிவரும். அப்போது தமிழையும் தெலுங்கையும் பிரிக்க முடியாது என்பார்கள்.அதற்கு முன் இந்தியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்பார்கள். அந்த மாதிரி ஜோடி ஜோடியாகத்தான் படங்கள் வெளிவந்தன.
திரைப்படங்கள் போன்று திரையிசையிலும் அது போன்ற தாக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. பேசும் படம் வந்த கால கட்டத்தில் வெளிவந்த தமிழ் திரையிசையில் ஆங்கிலப்படங்களின் தாக்கமே அதிகமாக இருந்தது. அதற்கு அப்புறம் இந்தி திரையிசையின் தாக்கம் வர ஆரம்பித்தது. அதற்கு பின்னர் தெலுங்கு, அதற்கு அப்புறம் தான் தென்பிராந்திய வாசம் அடிக்க ஆரம்பித்தது.
உதாரணத்துக்குச் சொன்னால், சந்திரலேகா படத்தின் இசை முழுவதும் ஹாலிவுட் இசையை தழுவியது மாதிரிதான் இருக்கும்.
“ஐ லோ பக்கிரியாமா…” என்ற பாட்டு தான் அந்த படத்தில் பிரபலம். இந்த பாடல் முழுவதும் மேற்கத்திய இசையில் அமைந்தது தான்.
அதற்கு அப்புறம் ‘மீரா’ ரொம்பவும் பிரபலமான படம். அதில் இடம்பெற்ற “காற்றினிலே வரும் கீதம்” பாடலும் பிரபலம். இது எதனோட இன்ஸ்சிபிரேஷன் தெரியுமா?
இசைமேதை எஸ்.வி.வெங்கடராமன் ஐயாகிட்ட கல்கி குடும்பத்தினர், “டூட்டு கயி மன் பீனா” என்ற இந்திப் பாடலை ஆதாரமாக வைத்து “காற்றினிலே வரும் கீதம்” பாடலை அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.
‘மீரா’ படமே ராஜஸ்தானில் நடைபெற்ற கதை என்பதால் அந்த படத்தில் இந்தி வாசனை இல்லாமல் தவிர்க்க முடியாது.அதனால் இந்தியும் தமிழும் கை கோர்த்தது.
தமிழ் படங்களில் தென்னிந்திய வாசனை அடிக்க ஆரம்பித்தது சுதர்சனம் மாஸ்டரின் வருகைக்கு பின்னர் தான். அவர் ஏ.வி.எம். உடன் கை கோர்த்து பெரிய பெரிய காவியப் படங்களை எடுத்தார். “நாம் இருவர்” மற்றும் “சகுந்தலை” படத்துக்கு பின்னர் தான் தமிழ்திரையிசைக்கு என்று தனியாக ஒரு ஓசை ஒலிக்க ஆரம்பித்தது. பின்னர் அதனை மற்றவர்களும் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
இந்த பரிணாம வளர்ச்சியை பின்னால் இருந்து பார்ப்போம். ஏ.ஆர்.ரகுமான் சார் இசையில் “புக்கார்” என்ற ஒரு இந்தி படம் வெளி வந்தது. அதில் “சுன் தா ஹே மேரா குதா” அப்படினு ஒரு பாட்டு இருக்கு. அந்த பாட்டோட ரிக்கார்டிங் முடிந்த பிறகு ரகுமான் சொன்னார், “என்னை அறியாமலேயே இந்த பாடலை, வேறு ஒரு பாட்டில் இருந்து இன்சிபிரேஷனா எடுத்து இருக்கேன். அது எனக்கு தெரியல. அந்த அளவுக்கு அந்த பாட்டு எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு” என்றார்.
அந்த பாடல் “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?” என்றைக்கோ மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த அந்த பாடல் பின்னால் வந்த ரகுமானுக்கு தூண்டு கோலாக அமைந்திருக்கிறது.
பாலிவுட் இசையுலகை நம்மவர்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் அவர்களும் நம்முடைய இசையைக் கேட்டு பிரமித்து போய் உள்ளார்கள். இதற்கு எத்தனையோ சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
‘தளபதி’ படத்தின் பாடல் ரிக்கார்டிங் மும்பை ஸ்டூடியோவில் நடந்தது. “ராக்கம்மா கையைத் தட்டு” என்ற பாடலின் இசையை கேட்டு பிரமித்து, அன்றைக்கு அந்த ஸ்டூடியோவில் இருந்த பாம்பே இசைக் கலைஞர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று கையை தட்டினார்கள். யாருக்கு..? நம்ம இளையராஜா சாருக்கு தான். நல்ல இசையை யார் கொடுத்தாலும் அதை உலகம் மதிக்கும் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.
பாலிவுட்டில் பல இசை மேதைகள் இருந்தார்கள். அதில் முக்கியமானவர் சலீல் சவுத்ரி அவர்கள். நாடு முழுவதும் அவருக்கு நல்ல பேர் உண்டு. தமிழில் “அழியாத கோலங்கள்” படத்துக்கு அவர்தான் இசையமைத்துள்ளார்.
சென்னையில் ஒரு படத்துக்கான ரிக்கார்டிங் நடக்கிறது. அதில் சலீல் சவுத்ரி கலந்து கொள்கிறார். அந்த படத்தின் இசையைக் கேட்டதும் “என் வாழ்நாளில் இந்த மாதிரி ஒரு இசையைக் கேட்டதில்லை. இது புதுமையாக இருக்கிறது. கண்டிப்பாக இது புதிய இசைப் பயணத்தின் ஆரம்பம்” என்று வாழ்த்தி இசையமைப்பாளரை ஆசிர்வதிக்கிறார்.
அந்த ஆசிர்வாதத்தை வாங்கியவர் இளையராஜா சார். தரங்கினி ஸ்டூயோவில் அன்று நடந்த ரிக்கார்டிங் ‘பிரியா’ படத்தோட ரிக்கார்டிங். தமிழ் திரையிசை உலகில் ஸ்டீரியோ டெக்னாலாஜி பயன்படுத்தி ரிக்கார்டிங் செய்யப்பட்ட முதல் படம் பிரியாதான்.
இது போன்று மற்றொரு மேதையான ஆர்.டி.பர்மன் அவர்களும் சென்னை வருகிறார். இங்கு ஒரு தமிழ்ப்படத்தை பார்க்கிறார். அந்த படத்தை இந்தியிலும் தயாரிக்கிறார்கள். அதற்கு அவர் தான் இசையமைக்க போகிறார். அவர் மிகப் பெரிய இசை மேதை. அவர் அந்த தமிழ்ப்படத்தை பார்த்து விட்டு என்ன சொன்னார் தெரியுமா?
இந்த படத்தோட இந்தி ரீமேக் இசையை நான் தான் அமைக்கப் போகிறேன். ஆனால் இந்த படத்தில் உள்ள இசையைப் போன்று 50 சதவீதம் அமைப்பதே பெரிய விசயம் தான். நிச்சயமாக அதை மேட்ச் பண்ண என்னால் முடியாது” என்றார்.
அவர் பார்த்து பிரமித்த படம் எது தெரியுமா? “சிவப்பு ரோஜாக்கள். அந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா சார்.
இன்னும் கொஞ்சம் பின்னோக்கி வாங்க… “நாங்கள் ஒருத்தரை வியந்து பார்க்கிறோம். அவர் இசையை கேட்டால் மயங்கி போகிறோம் ” என்று கூறிய மெல்லிசை மன்னர்கள் அவர் மாதிரியே இசை அமைக்கணும் என்று ஆசைப்பட்டு ஒரு பாட்டை பண்றாங்க..
மும்பையில் நடந்த கச்சேரி ஒன்றில் அந்த பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசிலா ஆகியோர் பாடுகிறார்கள். அந்த பாடலைக் கேட்ட இந்தி இசையமைப்பாளர் ஒ.பி.நய்யார் சார், “பாட்டு என்றால் இப்படித்தான் இருக்கணும்!” என்று வியந்து போகிறார். அவர் மனதை கவர்ந்த அந்த பாடல் “அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா”
மெல்லிசை மன்னர்களோ இந்த பாடலை, ஒ.பி.நய்யாரின் பாடலைக் கேட்டுதான், அதன் தாக்கத்தில் உருவாக்கி இருந்தார்கள். அந்த பாடலைக் கேட்டு ஒ.பி.நய்யார் இப்படி வியந்து பாராட்டுகிறார்.
ஆக மேதைகள் ஒருவரை ஒருவர் பாராட்டும் போதுதான் இசையின் பரிணாம வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே போகும். அது தான் புதிய புதிய இசையில் அபூர்வ பாடல்களை நமக்கு தரும்.
கர்வம் கொள்ளாமல் ஒருவர் திறமையை ஒருவர் பாராட்டும் கலாச்சாரம் என்றைக்கும் தமிழ் திரையிசை உலகில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இசைக்கும் பெருமை, நமக்கும் இனிமை கிடைக்கும்.
தொடர்புக்கு:- info@maximuminc.org

source