2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

பாக்., செல்லுமா இந்தியா * என்ன சொல்கிறார் மத்திய அமைச்சர் – Dinamalar

புதுடில்லி: ”இந்திய அணி, பாகிஸ்தான் செல்வது குறித்து உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்யும். இதற்கான வாய்ப்பு குறைவு தான்,” என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ல் (50 ஓவர்) பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) தலைவருமான ஜெய் ஷா கூறுகையில்,”ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது. பொதுவான இடத்தில் இந்தியா பங்கேற்க விரும்புகிறது,” என்றார்.

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் அறிவிப்பு ஆசியா, சர்வதேச கிரிக்கெட் அணிகளில் பிளவை ஏற்படுத்தும். இதுகுறித்து விவாதிக்க ஏ.சி.சி., அவசர கூட்டத்திற்கு அழைப்பு விட வேண்டும். இந்திய அணி, பாகிஸ்தான் வர மறுக்கும் பட்சத்தில், 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில்(50 ஓவர்) பங்கேற்க பாகிஸ்தான் செல்லாது,’ என தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியது:

இந்திய மண்ணில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற அனைத்து அணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். பாகிஸ்தான் அணி இதற்கு முன் பலமுறை இந்தியா வந்து போட்டிகளில் பங்கேற்றது. அதேபோல யாரையும் விளையாட வேண்டாம் என சொல்லும் இடத்தில் இந்தியா இல்லை என நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் அனைத்து அணிகளும் இந்தியா வந்து போட்டிகளில் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறேன். மற்றபடி இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா, செல்லாதா என்பதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

கொரோனா வரும் என யாருக்குத் தெரியும். இதுபோல எதுவும் நடக்கலாம். ஆனால் இந்திய அணி, பாகிஸ்தான் செல்லும் வாய்ப்பு குறைவு. மத்திய உள்துறை அமைச்சகம் தான் இறுதி து முடிவெடுக்கும். ஒட்டுமொத்தமாக வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

என்ன காரணம்

இந்திய அணி கடைசியாக 2008ல்(ஜூன்-ஜூலை) பாகிஸ்தான் சென்று ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றது. பின் 2008, நவ., 26ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்திய அணி, பாகிஸ்தான் செல்லவில்லை. 2012ல் பாகிஸ்தான் இந்தியா வந்து இரு அணிகள் மோதிய தொடரில் பங்கேற்றது. அடுத்து இரு அணிகளும் சர்வதேச தொடரில் மட்டும் மோதி வருகின்றன.

தவிர 2009ல் லாகூரில் இலங்கை வீரர்கள் நடந்த தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படவில்லை. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் சென்று விளையாடின. ஆனால் இந்திய அணி மட்டும் மறுப்பதால், பாகிஸ்தான் கோபத்தில் உள்ளது.

அரசு முடிவு செய்யும்

பி.சி.சி.ஐ., தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில்,”பொதுவாக இந்தியாவை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் அரசின் அனுமதி கிடைக்க வேண்டும். இவ்விஷயத்தில் நாங்களாக முடிவெடுக்க முடியாது. நாங்கள் அரசினை சார்ந்து தான் செயல்படுகிறோம். பாகிஸ்தான் செல்வது குறித்து இன்னும் யாரையும் அணுகவில்லை,” என்றார்.

Home கருத்தைப் பதிவு செய்ய
மேலே செல்ல ↑
All Rights Reserved

source