
தண்டையார்பேட்டை: ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தாமலும் செயல்பட்ட 120 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்டவை முக்கிய பங்கு வசிக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள், வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் பலர் முறையாக சொத்து வரி செலுத்தாததால் மாநகராட்சிக்கு வருவாய் பாதித்து, வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, சமீப காலமாக அதிக சொத்து வரி நிலுவையில் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ₹10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்துள்ளது. இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னதாக, வரி பாக்கி வைத்துள்ள கட்டிடங்களுக்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு பேனர் வைக்கப்படும் என்றும், அதை மீறியும் நிலுவை வரியினை உடனடியாக செலுத்தாவிடில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதேபோல், உரிமம் பெறாமல் கடை நடத்தும் நபர்களும் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை காரணமாக சொத்து மற்றும் தொழில் வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத பல நிறுவனங்கள் தங்களது வரி நிலுவையினை செலுத்தியுள்ளன. இதன் காரணமாக பல கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி, 5வது மண்டலத்திற்குட்பட்ட ரிச்சி தெரு, நைனியப்பன் தெரு, தங்க சாலை ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 100க்கும் மேற்பட்ட கடைகள் தொழில் உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தாமலும் செயல்பட்டு வருவது தெரியவந்தது. அந்த கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதும், உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தாமலும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இதனால், அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.
அதன்படி, 5வது மண்டல உதவி வருவாய் அலுவலர் தலைமையில், உரிமம் ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று ரிச்சி தெருவில் 90 கடைகள், நைனியப்பன் தெருவில் 24 கடைகள், தங்க சாலை தெருவில் 6 கடைகள் என மொத்தம் 120 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க சிந்தாதிரிப்பேட்டை, பூக்கடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்திய பிறகு அவர்களின் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan