2022-09-26

TNLiveNews

Minute to Minute NEWS!

தேஜாவு – திரைப்பட விமர்சனம் – BBC Tamil

பட மூலாதாரம், WHITE CARPET FILMS
நடிகர்கள்: அருள்நிதி, ஸ்மிருதி வெங்கட், மதுபாலா, அச்யுத் குமார்; இசை: ஜிப்ரான்; இயக்கம்: அரவிந்த் ஸ்ரீநிவாசன்.
அருள்நிதி, ஸ்மிருதி வெங்கட், மதுபாலா, அச்யுத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் தேஜாவு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த படத்தின் கதையை பற்றி ஏபிபி லைவ் இணையதளம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: "டிஜிபி ஆஷாவின் (மதுபாலா) மகளை ஒரு மர்ம கும்பல் கடத்தி விடுகிறது. அவரை மீட்க, அலுவல்பூர்வமற்ற போலீஸ் அதிகாரி என்ற பெயரில் களத்தில் இறங்குகிறார் விக்ரம் குமார் ( அருள்நிதி). இந்த கடத்தலில் எழுத்தாளராக வரும் அச்யுத் குமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வர, அவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் நடக்கும் சம்பவங்களையும், அடுத்து விசாரணையில் தொடரும் சம்பவங்களையும், அவர் முன்னமே கதையாக எழுதி இருப்பது தெரிகிறது. இந்தக் கதைக்கும் அந்த கடத்தல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு, இறுதியாக விக்ரம் ஆஷாவின் மகளை கண்டுபிடித்தாரா, கடத்தல் சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார், ஏன் அந்த கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்தான் மீதிக்கதை".
எதிர்பாராத திருப்புமுனை
படம் ஆரம்பத்தில் டேக் ஆஃப் ஆவதில் சற்றுத் தடுமாறுகிறது என்று விமர்சித்துள்ளது தினமலர் இணையதளம். "அருள்நிதி வந்த பிறகு கொஞ்சம் பரபரப்பு கூடுகிறது. சில எதிர்பாராத திருப்புமுனைகள் கதையில் அவ்வப்போது இடம்பெறுகின்றன. அதே நேரம் க்ளைமாக்சில் அத்தனை திருப்பங்களைக் கொடுப்பது ரொம்பவும் ஹெவியாக இருக்கிறது" என்று கூறுகிறது தினமலரின் விமர்சனம்.
"அருள்நிதி நாயகனாக நடித்து சமீபத்தில்தான் 'டி ப்ளாக்' என்ற த்ரில்லர் படம் வெளிவந்தது. அடுத்து மீண்டும் ஒரு த்ரில்லர் படமாக இந்த தேஜாவு படத்தில் நடித்திருக்கிறார் அருள்நிதி. அண்டர்கவர் ஆஃபீசராக மிகவும் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். பேச்சு, உடல்மொழி என இரண்டிலுமே கம்பீரத்தைக் காட்டியிருக்கிறார். ஆனால், மாநிலத்தின் டிஜிபியிடமே நெஞ்சை நிமிர்த்தி கண்டிஷனாகப் பேசுவதெல்லாம் ரொம்பவே ஓவர். கிளைமாக்சில் இவரது கதாபாத்திரம் பற்றித் தெரியவரும்போது எதிர்பாராத அதிர்ச்சியாகவே உள்ளது" என்கிறது தினமலர்.
மெதுவாக நகரும் 2ஆம் பகுதி
வித்தியாசமான கதைகளை ரசிக்கும் ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக தேஜாவு இருக்கும் என்கிறது நியூஸ் 7 தமிழ். "படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று மெதுவாகவே நகர்கிறது. அதிலும் சில காட்சிகள் சற்று சலிப்பையே ஏற்படுத்துகின்றன. முதல் பாதி கதையை போலவே இரண்டாம் பாதி கதையையும் சற்று விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதே நேரத்தில் முதல் படத்திலேயே இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ள இயக்குநர் அரவிந்த் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்" என்கிறது அந்த இணைய தளம்.
ஒவ்வொரு க்ரைம் த்ரில்லருக்கும், எல்லோரும் ஏற்கத்தக்க வகையிலான ஒரு க்ளைமாக்ஸ் தேவை. முடிவில் வெளியாகும் தகவல் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்தும். ஆனால், இந்தப் படத்தில் பார்வையாளர்களை திருப்திப்படுத்த எவ்வளவோ முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், அவை போலித்தனமாக இருக்கின்றன என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் இணையதளம்.
அருள்நிதி சிறப்பாக நடித்திருப்பதோடு, அந்தப் பாத்திரத்திற்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். டிஜிபியாக நடிக்கும் மதுபாலா சில இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு, ஜிப்ரானின் பின்னணி இசை ஆகியவற்றால் ஓரிரு இடங்களில் நம்மை ஈர்க்கிறது இந்தப் படம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
© 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

source