2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன? இதில் இலவசப் பயிற்சி தரும் குழு எங்குள்ளது? – BBC Tamil

பட மூலாதாரம், Visual Generation
ஒரு காலத்தில் மனிதன் உழைப்பின் மூலம் மட்டுமே பொருள்கள் உற்பத்தி ஆகும். தொழில்நுட்பம் வளர்ந்து, வளர்ந்து இன்றைக்கு கட்டளை பிறப்பித்தால் போதும், அந்தப் பொருள் முழுமையாக உற்பத்தியாகி வந்து நிற்கும்.
உதாரணமாக ஒரு புகைப்படத்தை நாம் நகல் எடுக்க வேண்டும் என்றால், எத்தனை நகல்கள் வேண்டும் என்று கட்டளையிட்டால், நமக்கு அந்த எண்ணிக்கையில் அந்த நகல்கள் நமக்குக் கிடைக்கும். இப்படி நாம் சொல்லக்கூடிய கட்டளைகளை எடுத்துக்கொண்டு அதற்கான வேலையை செய்வதற்கு மென்பொருள் மிகவும் முக்கியமானது.
கணிப்பொறி, மென்பொருளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அப்படிப்பட்ட மென்பொருள்களில் ஒரு வகை, திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் ( Free and open-source software) என்று அழைக்கப்படும்.
திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் (Free and open-source software) என்றால் என்ன?
ஒரு மென்பொருள் திறந்த நிலை கட்டற்ற மென்பொருள் என்றால், அந்த மென்பொருளை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கணினி நிரல்கள் (Computer Programing), பொது வெளியில் அனைவருக்கும் கிடைக்கும் என்று பொருள். குறிப்பாக இது பயனர்களுக்கு நான்கு சுதந்திரங்களை தருகிறது.
ஏன் திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் தேவை ?
நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய மென்பொருள், தனியுரிமை மென்பொருள்( Proprietary software) ஆகும். தனியுரிமை மென்பொருள் என்றால், அதனை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் பல கட்டுப்பாடுகள் இருக்கும்.
அந்த மென்பொருளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை பயனரே சரி செய்ய முடியாது. ஏனெனில், அந்த மென்பொருள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் பகிரப்படாது. இதனால் பயனர்கள் அந்த மென்பொருளை உற்பத்தி செய்த நிறுவனங்களை சார்ந்தே இயங்க வேண்டியது இருக்கும்.
மேலும், திறந்த நிலை கட்டற்ற மென்பொருள்கள் கொடுப்பது போன்ற நான்கு விதமான சுதந்திரங்களை இந்தத் தனியுரிமை மென்பொருள் ‌தராது.
இந்த திறந்தவெளி கட்டற்ற மென்பொருளை மையமாக வைத்து விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் (VGLUG) இயங்கி வருகிறது.
இந்தக் குழு கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு இலவசமாக திறந்த நிலை கட்டற்ற மென்பொருள் கணினி நிரல் பயிற்சிகளை வழங்குகிறது.
இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறனிடம் பிபிசி தமிழ் பேசியது. "சமூகத்தில் அறிவு சார்ந்த விஷயங்களை, அறிவியல் பார்வையோடு அனைவருக்கும் கடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை நாங்கள் கூட்டு முயற்சியாக செய்கிறோம்.
இந்தப் பயிற்சி மூலம் உயர் கல்வி முடித்தவுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு கிடைப்பது எளிதாகிறது.
மணிமாறன்
இதைத் தவிர, பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு செயலியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அது அவர்கள் செவி வழியே கற்க உதவும்.
விரைவில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும். அதேபோல, விழுப்புரம் மாநிலங்களவை உறுப்பினர் ரவிக்குமாரிடம், விழுப்புரம் மாவட்ட மக்களின் பிரச்சனைகளை கொண்டு சேர்ப்பதற்காக ஒரு பிரத்தியேக செயலியை உருவாக்கியுள்ளோம்.
இதே போன்ற செயலியை மற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.
இந்தப் பயிற்சியில் பங்கெடுத்த கௌசல்யா என்ற மாணவி கூறும்போது, "பைத்தான் என்ற கணினி நிரலை இலவசமாக கற்றுத் தருவதாக எங்கள் கல்லூரி மூலமாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. அந்தப் பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். ஆறு மாதம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தப் பயிற்சி தொடர்ச்சியாக நடைபெற்றது.
கல்லூரி முடித்த உடன், இந்தப் பயிற்சியின் உதவியாலும், இந்தக் குழுவின் வழியாகவும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.
கௌசல்யா
என்னைப் போல பல மாணவர்களும் அந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர். அது உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருந்தது. தற்போது நான் மீண்டும் இந்தக் குழுவில் இணைந்து என்னைப் போன்ற மற்ற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க உதவுகிறேன்," என்றார்.
பிற செய்திகள்:
© 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

source