2022-10-06

TNLiveNews

Minute to Minute NEWS!

தமிழ் சினிமாவும் பாலியல் தொழில் பற்றிய புரிதல்களும்!| My Vikatan – Vikatan

Save the vikatan web app to Home Screen tap on
அந்தக் கருத்து நம் தமிழ் சினிமாவில் இதுவரை பாலியல் தொழிலாளிகள் எப்படி காட்டப்பட்டுள்ளார்கள் என்பதை பற்றி சிந்திக்க தூண்டியது.
அந்தக் கருத்து நம் தமிழ் சினிமாவில் இதுவரை பாலியல் தொழிலாளிகள் எப்படி காட்டப்பட்டுள்ளார்கள் என்பதை பற்றி சிந்திக்க தூண்டியது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு “18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தனது சுயஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்களை காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது” என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அந்தக் கருத்து வரவேற்பும் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்தக் கருத்து நம் தமிழ் சினிமாவில் இதுவரை பாலியல் தொழிலாளிகள் எப்படி காட்டப்பட்டுள்ளார்கள் என்பதை பற்றி சிந்திக்க தூண்டியது. இதுவரை வந்த தமிழ் சினிமாவில் பாலியல் தொழிலாளிகள் பற்றிய காட்சிகளை பார்ப்போம்.
சமீபத்தில் வெளியான லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” படத்தில் பாலியல் தொழிலாளி குறித்த காட்சி இடம்பெற்றது. அந்தக் காட்சியில் நடித்த மாயா முகம் பதித்த மீம் சமூக வலைதளங்களில் நிறையவே பார்க்க முடிந்தது. விக்ரம் படம் பார்ப்பதற்கு முன்பு அந்த மீமை பார்த்ததும் “மாயா எதோ தவறான காட்சியில் நடித்துள்ளார் போல… சொதப்பிட்டாங்களே…” என்ற பயம் எனக்குள் தொற்றிக்கொண்டது. காரணம் மாயா மீது நான் வைத்திருக்கும் மரியாதை அப்படி. எழுத்தாளர் தமிழ்பிரபா விகடனில் பணியாற்றிய போது “தெய்வத்தால் ஆகாதெனினும்” என்னும் கட்டுரை தொடர் எழுதிவந்தார். அந்தத் தொடர் மூலமாக தான் மாயாவை நான் தெரிந்துகொண்டேன். மாயா தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பது மட்டுமில்லாமல் அவர் ஒரு “கிளவுனிங் டாக்டர்” என்பதும் தெரிய வந்தது. அந்தக் கட்டுரையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை தனது மருத்துவத்தால் சிரிக்க வைத்ததை பற்றி மாயா பகிர்ந்திருந்ததை படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்படிபட்ட மாயாவிற்காக தான் விக்ரம் படம் பார்க்க போனேன்.
விக்ரம் படத்தில் இளம் பாலியல் தொழிலாளியாக நடித்த மாயா குறித்த காட்சிகள் வந்தது. மாயா, ஃபகத் பாசிலிடம் கமல் தன்னிடம் “பிசிக்கலாக என்ன மாதிரி நடந்துகொண்டார்” என்பதை விளக்குவார். அந்தக் காட்சியில் கமல், பாலியல் தொழிலாளியாக நடித்த மாயாவை கட்டிப்பிடித்து கலங்கிய கண்களுடன் அவரது தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்வார். மிக அழகான காட்சியாக அது எனக்குத் தெரிந்தது. எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் அந்தக் காட்சியை “brilliant and poetic” என்று பாராட்டி இருந்தார். சில நாட்கள் கழித்து மீம் கிரியேட்டர்களும் அந்தக் காட்சியை சிலாகித்தனர். அந்த வகையில் மாயாவை “Gifted மாயா!” என்று நினைக்க தோன்றியது.
அந்தக் காட்சியை பார்க்கும்போது இரண்டு படங்கள் நினைவுக்கு வந்தது. ஒன்று கமல் மற்றும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் இணைந்த “மகாநதி”. மற்றொன்று இயக்குனர் ஷங்கர் மற்றும் எழுத்தாளர் சுஜாதா இணைந்த “பாய்ஸ்”.

மகாநதி படத்தில் வேற்று மாநிலமொன்றில் தன் மகள் பாலியல் தொழிலாளியாக வாழ்ந்துகொண்டிருப்பதை பார்த்து கண்கலங்கி கதறி அழுவார் கமல். அவரை சுற்றியிருக்கும் மற்ற பாலியல் தொழிலாளிகள் என்னவென்று புரியாமல் பார்க்க, “இவள் என்னுடைய மகள்… இவளை என்னோடு அனுப்புங்கள்…” என்று கமல் கெஞ்சிக் கேட்க… அந்த பாலியல் தொழிலாளிகள் நல்ல மனதோடு வாழ்த்தி கமலின் வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பார்கள்.
அந்த நதியின் படகில் பயணிக்கும்போது கமலின் தோளில் சாய்ந்துகொள்வார் அவரது மகள். அப்போது ஒலிக்கும் “எங்கேயோ திக்குத்திசை காணாத தூரம்தான்” என்ற பாடல் அவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கும். கமலின் நெஞ்சில் சாய்ந்து மகள் நிம்மதியாக உறங்குவாள். அப்போது வரும் “பசும்பொன்னே செவ்வந்திப் பூவே இத்துடன் சோகம் சென்றதடி” என்ற வரிகள் ரொம்பவே அழுத்தமானது.
அந்த மகள் காட்சிகள் தான் விக்ரம் படத்தில் மாயா கதாபாத்திரம் எழுதப்பட்டதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்று தோன்றியது. (நிஜ உலகில் வேற்றுமொழி படமொன்றில் பாலியல் தொழிலாளியாக நடிக்க தயாரான தனது மகள் ஸ்ருதிஹாசனுக்கு கமல் மேக்கப் போட்டுவிட்டார் என்பது கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பேசப்பட்டது என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.)
அடுத்ததாக “பாய்ஸ்” படத்தில் இடம்பெறும் பாலியல் தொழிலாளி காட்சிகள். விவேக் திருமணமாகாத காதலில் தோல்வியடைந்த நபர். அவரது உடல் தேவைக்கு ஒரு பெண்ணை அனுகியதை பாய்ஸ் குழுவினரிடம் பகிர்கிறார். பாய்ஸ்- க்கு வயது கோளாறு காரணமாக அந்த பாலியல் தொழிலாளியுடன் ஒரு இரவை கழிக்க வேண்டுமென ஆசை வருகிறது. பாலியல் தொழிலாளியும் அவர்களது இருப்பிடத்திற்கு வருகிறார். அப்படி வந்த ஒரு பாலியல் தொழிலாளி கையில் குழந்தையோடும் கழுத்தில் தாலியோடும் இருக்கிறார். அதை பார்த்ததும் முதன்மை நாயகனான சித்தார்த்திற்கு மனம் உறுத்துகிறது. அதை பாலியல் தொழிலாளியிடம் வெளிப்படுத்த, அந்தப் பாலியல் தொழிலாளி “உனக்கு மனைவியா வர போற பொண்ணு கொடுத்து வச்சுவ” என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.
இதுவுமே கூட ஒருவகையில் விக்ரம் பட மாயா காட்சிகளோடு ஒன்றிப் போகிறது. மேற்கண்ட இந்த இரண்டு படங்களிலும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் மற்றும் எழுத்தாளர் சுஜாதா இருவரது பங்களிப்பு இருந்தது. இதேபோல எழுத்தாளர் பாலகுமாரன் திரைக்கதை ஆசிரியராக வசனகர்த்தாவாக பணியாற்றிய “புதுப்பேட்டை” படத்திலும் பாலியல் தொழிலாளி குறித்த காட்சிகள் இடம்பெறும்.
புதுப்பேட்டையில் உறவுகளை தொலைத்ததை போல உணரும் குமார் (தனுஷ்) என்கிற நாயகன் பாலியல் தொழிலாளியான கிருஷ்ணவேணி (சினேகா) மீது ஒருவித பற்று வைக்கிறான். தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் கிருஷ்ணவேணியிடம் தந்துவிட்டு எதுவும் செய்யாமல் போகிறான். பாலியல் தொழிலாளியாக கிருஷ்ணவேணி படும் சிரமங்களை அனுபவிக்கும் கொடுமைகளை கண்டு மனம் வெதும்புகிறான் குமார். ஒருகட்டத்தில் குமாரும் கிருஷ்ணவேணியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதன் பிறகு கிருஷ்ணவேணி பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை.
வாழ்க்கை ஓரளவுக்கு நல்லவிதமாக போக திடீரென குமார் இன்னொரு அழகான பெண்ணின் (சோனியா அகர்வால்) கழுத்தில் தாலி கட்டுகிறான். முந்தைய நாள் இரவில் குமாருடன் குத்தாட்டம் போட்ட கிருஷ்ணவேணி இப்போது அதை கண்கூட பார்த்ததும் திருமண மண்டபத்தில் இருந்து அழுதபடி வெளியேறுகிறாள். பாலியல் தொழிலாளி என்றாலும் அவளுக்குள் இருந்த காதல் வெளிப்பட்ட இடம் அது.
மகாநதி, பாய்ஸ், புதுப்பேட்டை படங்களுக்குப் பிறகு பாலியல் தொழிலாளி குறித்த காட்சி இயக்குனர் ராமின் “கற்றது தமிழ்” படத்தில் கவனிக்கும்படி இடம்பெற்றது. பிரபாகரனின் (ஜீவா) தேவதையான ஆனந்தி (அஞ்சலி) தடம் மாறி பாலியல் தொழில் செய்ய நேர்கிறது. ஆனந்தி பாலியல் தொழிலாளி தானே என்பதால், ஒரு ஆண் அவளை வன்கொடுமை செய்கிறான். அப்போது திடீரென ஒருநாள் எதிர்பாராதவிதமாக அவ்வழியே சென்ற பிரபாகரனின் காதுக்கு ஒரு பெண்ணின் அழுகை குரல் கேட்கிறது. பிரபாகரன் அந்த அழுகை சத்தம் நோக்கி தேடிச் செல்ல அந்த அழுகை சத்தம் தன் தேவதையான ஆனந்தியின் சத்தம் என்றதும் அதிர்கிறான். கண்ணீரும் ரத்தமுமாக இருக்கும் ஆனந்தியின் முகம் அவனை வேதனைக்குள்ளாக்குகிறது. அவளை கொடுமைபடுத்திய ஆண், “நான் காசு கொடுத்திருக்கேன்…” என்று கொஞ்சமும் மனசாட்சியின்றி பேச, “காசு கொடுத்தா என்ன வேணா செய்வியா?” என்று ஒட்டுமொத்த பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதரவாக பேசும் வகையில் கேள்வி எழுப்பி அந்த மிருகத்தின் நெஞ்சில் பத்து விரல்களின் நகத்தால் கீறி அடித்து விழ்த்தி தன் தேவதையான ஆனந்தியை அங்கிருந்து மீட்டு தன்னோடு அழைத்துச் செல்வான் நாயகன்.
அப்படி புதிய பயணத்தை தொடங்கும் ஒரு பேருந்து பயணத்தில் ஒரு வெத்தல பாக்கு வாயன் ஆனந்தியை பார்த்து கண் அடித்து அழைக்க, அவன் வாயை உடைத்துவிட்டு வருகிறான் பிரபாகரன். “இவ்வளவு நாள் எத்தன பேரு தொட்டாங்க… என்னென்னலாம் நடந்துச்சு… எதாச்சும் கேளு பிரபா…” என்று ஆனந்தி சொல்ல, “எனக்கு அதெல்லாம் தேவ இல்ல… எனக்கு என் ஆனந்தி கிடச்சிட்டா… அதுபோதும்…” என்று அவளை ஏற்றுக்கொள்கிறான் பிரபா. அழுக்கு முகம், அடர்தாடி என்றபோதிலும் இந்த இடத்தில் பிரபாகரனை மிக அழகானவனாக காட்டியிருப்பார் இயக்குனர் ராம். ராம் நிஜத்தில் தமிழ் இலக்கியம் படித்தவர். அவரது நாயகனான பிரபாகரனும் தமிழ் இலக்கியம் படித்தவன். இலக்கியம் ஒரு மனிதனை என்ன செய்யும் என்பதற்கு இந்தவொரு காட்சி சிறந்ததொரு உதாரணம்.
இதே இயக்குனர் ராம் தனது “தரமணி” படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றி நேர்மறையான புரிதலோடு காட்சி வைத்திருப்பார். கடைசியாக வெளியான அவரது “பேரன்பு” படத்தில் தனது மகளின் உடல் தேவைக்காக ஆண் பாலியல் தொழிலாளி ஒருவர் வேண்டுமென விபச்சார விடுதியில் கேட்கும் மனதளவில் நொந்துபோன ஒரு தந்தையாக (மம்முட்டி) நாயகனை காட்டியிருப்பார் ராம். இந்தப் படத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு திருநங்கையை மீட்டெடுத்து அவரை தன் வாழ்க்கைத் துணையாக, மனைவியாக நாயகன் அமுதவன் (மம்முட்டி) ஏற்றுக்கொள்வதுபோல் காட்சி வைத்திருந்தது பலராலும் பாராட்டப்பட்டது.
பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணை நாயகன் காதலித்து திருமணம் செய்துகொள்வது போல்…
* சிம்புதேவனின் “அறை எண் 305-ல் கடவுள்” படத்திலும்… (சந்தானம் காதலிக்கும் பெண் பாலியல் தொழிலாளி. இருந்தபோதிலும் சந்தானம் அவரை கரம்பிடிப்பார்),

*சுசூந்திரனின் “ஜீனியஸ்” படத்திலும்…

*சுஜாதாவின் “வசந்தகால குற்றங்கள்” நாவலை தழுவி எடுத்த “144” படத்திலும் காட்டியிருப்பார்கள்.
(பாலியல் தொழிலாளியான ஓவியாவை நாயகன் மிர்ச்சி சிவா காதலித்து திருமணம் செய்துகொள்வார்)

பாலாஜி சக்திவேலின் “வழக்கு எண் 18/9” படத்தில் ஆதரவற்ற நாயகனை ஒரு பாலியல் தொழிலாளி மீட்டெடுத்து அவனுக்கு வேலை வாங்கி கொடுத்து அவனுக்கொரு புது வாழ்க்கையை தொடங்கி வைப்பதுபோலும் பின்னாளில் அந்தப் பாலியல் தொழிலாளி காணாமல் போவதுபோலும் காட்சி வைத்திருப்பார்கள். அதுவும் ஒரு குறிப்பிடத்தகுந்த காட்சி.
பிக்பாஸ் வின்னரான நடிகை ரித்விகாவும் “அந்நியன்” சதாவும் “டார்ச்லைட்” என்கிற படத்தில் இரவு நேரங்களில் சாலையோரம் நின்று டார்ச்லைட் அடித்து லாரி ஓட்டுனர்களை கவனம் ஈர்த்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களாக நடித்திருப்பார்கள். “வானம்” படத்தில் அனுஷ்கா ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தங்கமீன்கள்” படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருது வாங்கியவர் ஜேஎஸ்கே. “வண்ண வண்ண பூக்கள்” மற்றும் “அசுரன்” படங்களுக்காக சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதுகள் வாங்கியவர் கலைப்புலி எஸ். தாணு. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளர்களான இவர்கள் இருவரும் பாலியல் தொழிலாளிகள் குறித்த படங்களை தயாரித்து உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஜேஎஸ்கே தயாரித்தது “சிகப்பு எனக்கு பிடிக்கும்” – கலைப்புலி எஸ். தாணு தயாரித்தது “துப்பாக்கி முனை”.
இந்த இரண்டு படங்களிலுமே அப்பாவி சிறுமி ஒருவரை மிருகத்தனமான ஆண்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்து அச்சிறுமியின் வாழ்க்கையை சிதைத்ததாக காட்டியிருப்பார்கள். அந்த இரண்டு படங்களில் வரும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் அப்பாவும் “விபச்சாரத்த சட்டப்பூர்வமாக்குங்க… இந்த மாதிரி நாய்ங்கலாம் அங்க போயி தொலையட்டும்…” என்று வசனம் பேசியிருப்பார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பாலியல் தொழிலாளிகள் குறித்த உச்சநீதிமன்ற கருத்து இந்த வசனங்களை நினைவூட்டியது.
சமீபத்தில் வெளியான சஞ்சய் லீலா பன்சாலியின் “கங்குபாய் கத்தியாவதி” படம் ஒரு பெண் பாலியல் தொழிலாளி எப்படி கவனிக்கதக்க மனிதராக மாறி பெண்களின் (குறிப்பாக பாலியல் தொழிலாளிகளின்) அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்தார் என்பதை பற்றி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

source