2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

தமிழ்நாடு தினத்தை ஜூலை 18ஆம் தேதி அரசு கொண்டாடுவது சரியா? – BBC Tamil

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு தினம் ஆக கடைப்பிடிக்கப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநிலத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட நாளை மாநில நாளாக கொண்டாடலாமா என்ற சர்ச்சை நீடிக்கிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், தங்கள் மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழ்நாடு எந்த மாநிலத்திலிருந்தும் பிரிக்கப்படாத மாநிலமாகவும் அதன் முந்தைய வடிவமான சென்னை மாகாணத்திலிருந்தே வேறு மாநிலங்கள் பிரிந்ததாலும் மாநில தினம் என்று எந்த நாளும் குறிப்பிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2019ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு மாநில தினமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நவம்பர் ஒன்றாம் தேதியையே தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. தெலங்கானா மாநிலம் ஆந்திராவிலிருந்து பிரிந்து தனி மாநிலமான ஜூன் 2ஆம் தேதியை மாநில தினம் ஆக கொண்டாடி வருகிறது.
ஆனால், திமுக அரசு பதவியேற்ற பிறகு இந்த நாளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், "1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும் மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்று, ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்தத் தருணத்திலேயே இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை விரிவான எதிர்ப்புகளை பதிவுசெய்தன.
"தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக 1956ல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து, 1967 ஆம் ஆண்டுதான் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அது நடைமுறைக்கு வந்தது. இந்த இரண்டும் வெவ்வேறு நடைமுறைகள். ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாக கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாக கொண்டாட முடியாது. இது பின்னாளில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். அதை தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ்.
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதிமுக அரசுதான் நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது என்பதால், முதலமைச்சரின் அறிவிப்புக்கு அப்போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்தார்.
"ஓர் அலுவலகமோ, கட்டடமோ முழுவதுமாக முடிக்கப்பட்டு என்றைக்குத் திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் 'தோன்றிய நாள்' ஆக கருதப்படுமே தவிர, திட்ட அறிக்கை தயார் செய்தது, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றை எல்லாம் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாக கருத முடியாது. எனவே, `ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள்' என்ற அறிவிப்பு நியாயமற்றதாக இருக்கிறது" என்று கூறினார்.
தமிழ்நாடு தினம் இதற்கு முன்பாக பெரிய அளவில் கொண்டாடப்பட்டதில்லை. "பெரும்பாலான தமிழ் தேசிய இயக்கத்தினர் நம் நிலப்பகுதியை இழந்த தினமாகத்தான் அந்த நாளைக் கருதின. இழந்த தமிழ்ப் பகுதிகளை மீட்க வேண்டும் என்று அந்த நாட்களில் பேசுவார்கள். அதற்கு மேல் பெரிதாக அந்த தினத்திற்கு முக்கியத்துவம் இருந்ததில்லை" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார்.
"நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதியிடம் தமிழ்நாடு தினம் குறித்து கேட்டேன். அண்டை மாநிலங்கள் நவம்பர் ஒன்றாம் தேதியை கொண்டாடும்போது நாம் ஏன் கொண்டாடக்கூடாது என்று கேட்டேன். மு. கருணாநிதி சொன்னார், அவர்கள் நிலப்பகுதிகளை பெற்றுக்கொண்டார்கள்; அதனால் கொண்டாடுகிறார்கள். நாம் நம் நிலப் பகுதிகளை இழந்திருக்கிறோம். அதனால் எப்படிக் கொண்டாட முடியும் என்று கேட்டார். ஆனால், 2006ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவானதன் பொன் விழா ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு மட்டும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட்டது" என நினைவுகூர்கிறார் அவர்.
பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
அப்படியானால், தமிழ்நாட்டின் நிலப்பகுதி வரையறுக்கப்பட்ட தினத்தை தமிழ்நாடு தினமாகக் கொண்டாடுவதுதானே சரி? "நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது மிக மிக முக்கியமான ஒரு தருணம். எந்த மாநிலத்தின் பெயரிலும் நாடு என்று இருக்காது. அப்படி ஒரு பெயரை நாம் பெற்றிருக்கிறோம். தமிழ்நாடு தினமாக இந்த நாளை அறிவித்தது மிகப் பொருத்தமானது.
ஆனால், அது வெறும் கொண்டாட்டமாகப் போய்விடக்கூடாது. தமிழ் பண்பாடு, மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையில் அந்த தினத்தில் ஏதாவது செய்ய வேண்டும். தமிழ்நாட்டின், தமிழ் இனத்தின் தனித்துவம் குறித்து விவாதிக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு எனச் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான திட்டங்களை அந்த நாளில் அறிவிக்கலாம்" என்கிறார் து. ரவிக்குமார்.
ஆனால், இது தமிழின உணர்வை முடக்குவதற்காக செய்யப்படும் வேலை என்கிறார் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன். "தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கான தீர்மானம் முன் மொழியப்பட்ட தினம் அது. அவ்வளவுதான். மத்திய அரசு அந்தப் பெயரை ஏற்றுக்கொண்ட தேதிகூட வேறு. அப்படி ஒரு தீர்மானம் முன் மொழியப்பட்ட நாளை தமிழ்நாடு தினமாகக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? நவம்பர் 1ஆம் தேதி நம் நிலப்பகுதிகளை இழந்ததால், அதைக் கொண்டாட முடியாது என்கிறார்கள். இழந்ததை மீட்க என்றைக்காவது போராடியிருக்கிறார்களா? பிள்ளைக்கு பிறந்த நாளைக் கொண்டாடுவார்களா, பெயர்வைத்த நாளைக் கொண்டாடுவர்களா? இதன் நோக்கமே, தமிழ் உணர்வை மழுங்கடிப்பதுதான்" என்கிறார் மணியரசன்.
மொழிவாரி மாநிலங்களின் பின்னணி
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தியா புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, குடியரசாக உருவெடுத்தபோது, 28 மாநிலங்கள் இந்தியாவில் இருந்தன. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் அரசியல்சாஸனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்கள், இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல முடியாது. ஆனால், தங்களுக்குள் பிரிந்துகொள்ளலாம், சேர்ந்துகொள்ளலாம். மாநிலங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்படலாம். மாநிலத்திற்கு புதிய பெயர் சூட்டப்படலாம்.
ஆனால், ஆந்திராவைத் தனியாகப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்ததால், 1953ல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் ஃபசல் அலி, கே.எம். பணிக்கர், எச்.எம். குன்ஸ்ரு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆணையம், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கப் பரிந்துரைத்தது. அதன்படி பல புதிய மாநிலங்கள் உருவாயினர்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், மாநிலங்கள் பிரிவது அதோடு நிற்கவில்லை. 1960ல் குஜராத்தும் மகாராஷ்டிராவும் பிரிந்தன. அதற்குப் பிறகு இந்திய நிலப்பரப்பில் இருந்த போர்ச்சுகீசிய பகுதிகள் 1961ல் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. 1963ல் பிரெஞ்சுப் பகுதிகள் இந்தியாவோடு இணைக்கப்பட்டனர். 1963ல் நாகாலாந்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. 1966ல் பஞ்சாப், ஹரியானா பிரிக்கப்பட்டது. 1972ல் வடகிழக்கு மாநிலங்களும் அசாமும் சீரமைக்கப்பட்டன. இதையடுத்து மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மிசோராம் ஆகியவை உருவாயின.
1975ல் சிக்கிம் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளப்பட்டது. யூனியன் பிரதேசங்களாக இருந்த அருணாச்சலப் பிரதேசம், மிசோராம், கோவா ஆகியவை 1987ல் மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன. 2000வது ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து உத்தராகண்டும் மத்தியப் பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கரும் பிஹாரிலிருந்து ஜார்க்கண்டும் உருவாக்கப்பட்டன. 2014ல் ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டது. 2019ல் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாடு உருவான பின்னணி
1956ல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்திற்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
பட மூலாதாரம், TWITTER
சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1957ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். உண்ணாவிரதம் துவங்கிய 76வது நாள் அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. இதற்குப் பிறகு தமிழில் மட்டும் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 1961 பிப்ரவரி 24ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. ஆனால், ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தியது.
இந்த நிலையில்தான் 1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டத் தீர்மானித்தது. அதன்படி இதற்கான தீர்மானத்தை 1967 ஜூலை 18ஆம் தேதி முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.
அந்தத் தீர்மானத்தில் பேசிய அண்ணா, "நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது" என்றார்.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதும், அண்ணா எழுந்து "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறிவிட்டு, "தமிழ்நாடு" என மூன்று முறை குரல் எழுப்பினார். சட்டப்பேரவையின் எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று 3 முறை கோஷம் எழுப்பினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
© 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

source