2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

சேடப்பட்டி முத்தையா முன்பு அன்று உட்கார மறுத்த ஓ.பன்னீர்செல்வம்! பண்ணைவீடும் நாட்டுக்கோழி குழம்பும் – Oneindia Tamil

மதுரை: முன்னாள் சபாநாயகரும் திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவால் இன்று காலமாகிவிட்டார். 90 களில் அதிமுகவில் உச்சபட்ச அதிகாரத்தோடு வலம் வந்த சேடப்பட்டி முத்தையா முன்பு ஓ.பன்னீர்செல்வம் உட்கார மறுத்த விவரம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இது மட்டுமல்லாமல் சேடப்பாட்டி முத்தையா முன்பு ஒரு காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் வளைந்து குனிந்து பவ்யம் காட்டிய நிகழ்வையும் பெரும்பாலானோர் அறிந்திருக்க முடியாது.
அத்தகைய சேடப்பட்டி முத்தையாவின் வரலாறு என்ன, எப்படி கோலோச்சினார் என்பதை பார்க்கலாம். இதோ விவரம்:
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார் - தலைவர்கள் இரங்கல் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார் – தலைவர்கள் இரங்கல்
அதிமுகவில் எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்ட சேடப்பட்டி முத்தையா 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததோடு, மத்திய அமைச்சர், சபாநாயகர் என பல பதவிகளில் இருந்திருக்கிறார். கடந்த 1991 முதல் 1996 வரையிலான கால கட்டம் என்பது ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராக பதவி வகித்த காலம். அந்தக் காலகட்டத்தில் தான் முழுமையாக 5 ஆண்டுகள் சபாநாயகராக இருந்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றார் இவர்.
ஜெயலலிதாவின் எண்ண ஓட்டங்களுக்கும், கண் அசைவுக்கும் ஏற்ப அவையை நடத்துவதில் கெட்டிக்காரர். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்ற சேடப்பட்டி முத்தையாவுக்கு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்து உச்சபட்ச அங்கீகாரத்தை வழங்கினார் ஜெயலலிதா.
ஆனால் எல்லாம் ஒரு மாதத்திற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், சேடப்பட்டி முத்தையா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால் அவர் பதவி விலக வேண்டும் என குரல்கள் எழுந்தன. பாஜக தரப்பிலும் இது தொடர்பாக ஜெயலலிதாவிடம் பேசப்பட்டதால், கோபப்பட்ட அவர், பொதுவாழ்வில் நேர்மயை கடைபிடிப்பது அதிமுகவின் கொள்கை எனக் கூறி சேடப்பட்டி முத்தையாவை மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற வருத்தத்தில் மத்திய அமைச்சர் பதவியை பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள் ராஜினாமா செய்துவிட்டு தவித்து நின்றார் சேடப்பட்டி முத்தையா. ஆனாலும் கட்சியில் மாநில பொறுப்புகளை வழங்கி சேடப்பட்டி முத்தையாவுக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து வழங்கினார் ஜெயலலிதா. தலைமையோடு நெருங்கிய வட்டத்தில் இருந்ததால் செல்லும் இடங்களில் எல்லாம் சேடப்பாட்டி முத்தையாவுக்கு மதிப்பும் மரியாதையும் பெருகியது.
இதில் விஷேச தகவல் என்னவென்றால், அன்று சேடப்பட்டி முத்தையா முன்பு உட்கார கூட மறுத்தவர் ஓ.பி.எஸ். என்பதே. பவ்யம் என்றால் பவ்யம் அப்படியொரு பவ்யத்துடன் வளைந்து குனிந்து சேடப்பட்டி முத்தையா முன்பு நிற்பாராம் ஓ.பன்னீர்செல்வம். இதுமட்டுமல்லாமல் கொடை ரோட்டில் உள்ள தனது தோட்டத்திற்கு சேடப்பட்டி முத்தையா விவசாய பணிகளை கவனிக்க வரும்போதெல்லாம், நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறி குழம்பு என எடுத்து வந்து கொடுத்து கவனித்திருக்கிறார் ஓபிஎஸ்.
மேலும், பெரியகுளம் மக்களவை தொகுதிக்குள் சேடப்பட்டி முத்தையா எங்கு சென்றாலும் அவருடன் நிழல் போல் உடன் ஒட்டிக்கொண்டு சென்றவர் ஓ.பன்னீர்செல்வம். இப்படி தன் மீது விசுவாசமாக இருக்கும் பன்னீருக்கு பெரியகுளம் நகரச் செயலாளர் பதவியை பெற்றுக் கொடுத்து அரசியலில் முதல் முகவரியை பெற்றுக் கொடுக்கிறார் சேடப்பட்டி முத்தையா. இதையடுத்து தேனி மாவட்டத்திற்குள் டிடிவி தினகரன் என்ட்ரி கொடுத்ததும் சேடப்பட்டி முத்தையாவின் செல்வாக்கு சரியத் தொடங்குகிறது.
ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலரும் அப்படியே சேடப்பட்டி அணியில் இருந்து டிடிவி பக்கம் தாவுகிறார்கள். 1991 முதல் 2001 வரை சுமார் 10 ஆண்டுகள் உச்சபட்ச அதிகாரத்தோடு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வலம் வந்த சேடப்பட்டி முத்தையா அதன் பிறகு மெல்ல ஒதுக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் மருத்துவமனை செலவுக்கு கூட ஜெயலலிதாவின் உதவியை எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். ஆனால் போயஸ் கார்டனில் இருந்தோ சேடப்பட்டி முத்தையாவுக்கு எந்த பதிலும் செல்லவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்த சேடப்பட்டியார், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து 2006ஆம் ஆண்டு கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கிய கருணாநிதி அவரது அரசியல் அனுபவத்தை கட்சிக்கு பயன்படுத்திக் கொண்டார். இதனிடையே சேடப்பட்டி முத்தையாவின் இளைய மகன் மணிமாறன் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

source