2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

'சூப்பர் ஓவரில்' இந்தியா வெற்றி: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது – Dinamalar

மும்பை: பரபரப்பான இரண்டாவது ‘டி-20’ போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி, ‘சூப்பர் ஓவரில்’ ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோற்றது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடந்தது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி, பெத் மூனே ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 29 ரன் சேர்த்த போது தீப்தி சர்மா பந்தில் அலிசா ஹீலி (25) அவுட்டானார். பின் இணைந்த பெத் மூனே, தஹ்லியா மெக்ராத் ஜோடி இந்திய பந்துவீச்சை வெளுத்துவாங்கினர். தேவிகா வைத்யா பந்தை சிக்சருக்கு அனுப்பி தஹ்லியா, 37 பந்தில் அரைசதம் கடந்தார். ராதா யாதவ், ரேணுகா சிங் வீசிய 13, 14வது ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்த மூனே, ராதா பந்தை பவுண்டரிக்கு விரட்டி 38 பந்தில் அரைசதம் விளாசினார்.

தொடர்ந்து அசத்திய தஹ்லியா, அஞ்சலி சர்வானி வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய மூனே, தீப்தி சர்மா வீசிய 19வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய வீராங்கனைகள் திணறினர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்தது. மூனே (82 ரன், 13 பவுண்டரி), தஹ்லியா (70 ரன், 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

மந்தனா அபாரம்: கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்த போது ஷபாலி (34) அவுட்டானார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (4) ஏமாற்றினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய மந்தனா, 37 பந்தில் அரைசதம் கடந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (21) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய மந்தனா (79) நம்பிக்கை தந்தார்.

பின் ரிச்சா கோஷ், தேவிகா வைத்யா ஜோடி இணைந்து போராடியது. மேகன் வீசிய கடைசி பந்தை தேவிகா பவுண்டரிக்கு அனுப்ப, இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்தது. இதனையடுத்து போட்டி ‘டை’ ஆனது. ரிச்சா கோஷ் (26), தேவிகா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

‘திரில்’ வெற்றி: போட்டியின் முடிவு ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது. இதில் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். ஆஸ்திரேலியா சார்பில் ஹீதர் கிரஹாம் பந்துவீசினார். மந்தனா (1 சிக்சர், 1 பவுண்டரி சேர்த்து 13 ரன் *), ரிச்சா கோஷ் (6) கைகொடுக்க, இந்திய அணி ஒரு ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 20 ரன் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா, ரேணுகா சிங் பந்துவீச்சில் திணறியது. இதில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டுக்கு 16 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலை அடைந்தது.

187 ரன்

ஆஸ்திரேலிய பெண்கள் அணி (187), சர்வதேச ‘டி-20’ அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2018ல் மும்பையில் நடந்த போட்டியில் 186 ரன் எடுத்திருந்தது சிறந்த ஸ்கோராக இருந்தது.

* தவிர இது, இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர். 2018ல் மும்பையில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 199 ரன் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

Home கருத்தைப் பதிவு செய்ய
மேலே செல்ல ↑
All Rights Reserved

source