2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் வரலாறும், சிறப்புகளும் – Tamil Samayam

கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது எனவும் மரகதக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துகள் உள்ளன.
Sabarimala Ayyappa history – ஐயப்பன் பிறந்த வரலாறு :
தண்டகாருன்ய வனத்து மகரிஷிகளின் ஆணவத்தை போக்கி, அவர்களை நல்வழிபடுத்துவதற்காக சிவ பெருமான் பிச்சாடனராகவும், நாராயணர் மோகினியாகவும் அவதாரம் எடுத்தனர். அதே சமயம் பிரம்ம தேவரை நோக்கி தவம் இருந்த மகிஷி என்ற அரக்கி, சிவ-விஷ்ணு ஐக்கியத்தில், சக்தியில் உருவான குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என வரம் பெற்றாள். வரம் கிடைத்ததும் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்த துவங்கினாள்.
இதற்கிடையில் சிவ – விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து ஆனந்த மயமாக தோன்றிய குழந்தை, கழுத்தில் மணியுடன் பம்பா நதிக்கரையில் உதித்தது. அப்போது காட்டுக்கு வேட்டைக்கு வந்த பந்தள மன்னன், குழந்தை இல்லாத தனக்கு கிடைத்த வரமாக நினைத்து குழந்தையை எடுத்துச் சென்ற வளர்த்தார். கண்டத்தில் (கழுத்தில்) மணியுடன் பிறந்த குழந்தை என்பதனால் மணிகண்டன் என பெயர் சூட்டி வளர்த்தார். பகவான் வருகையின் பலனாக பந்தள ராஜாவின் மனைவியும் கருவுற்று, ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். பந்தள மன்னன், மணிகண்டனுக்கு முடி சூட நினைத்தார். இதனால் மணிகண்டனை ஒழித்து கட்ட எண்ணிய ராணியும், அமைச்சரும் பல சதி வேலைகள் செய்தனர்.
ராணிக்கு ஏற்பட்டுள்ள நோயை போக்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என மணிகண்டனை காட்டுக்கு அனுப்புகின்றனர். மணிகண்டனின் வரவிற்காக காத்திருந்த தேவர்கள், அவரிடம் முறையிட்டனர். மணிகண்டனும் மகிஷியை வதம் செய்து, தேவர்களை காப்பாற்றினார். சாபத்தால் அரக்கியாக இருந்த மகிஷி, அழகிய பெண்ணாக மாறி, மணிகண்டனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் தான் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதாக கூறிய மணிகண்டன், சபரிமலையில் தனக்கு அமைய கோவிலுக்கு அருகிலேயே மாளிகைபுறத்து அம்மனாக வீற்றிருந்து அருள்புரிய அருளினார்.
தேவர்கள் புலிகளாக மாறி வர, புலி மீது பவனி வந்த மணிகண்டனிடம் ராணியும், அமைச்சரும் மன்னிப்பு கேட்டனர். பந்தள மன்னனாக மறுத்த மணிகண்டன், சுவாமி ஐயப்பனாக 18 படிகள் அமைத்து, தவக்கோலத்தில் காட்சி செய்ய துவங்கினார்.
இருமுடி சுமந்த முதல் நபர் யார் தெரியுமா? சபரிமலை ஐயப்பன் பற்றி பலரும் அறியாத 10 தகவல்கள்
Ayyappa viratham rules – ஐயப்ப விரத விதிமுறைகள் :
ஐயப்ப பக்தர்கள் காவி, கருப்பு மற்றும் நீல நிற உடை அணிவார்கள். சபரிமலை செல்ல நினைப்பவர்கள் துளசி மணி மாலை மற்றும் ருத்ராட்ச மாலையை குருசாமி கையால் அணிவார்கள். இந்த மாலை 54, 108 என்ற கணக்கில் அமைந்திருக்க வேண்டும். 41 நாட்கள் கடுமையான விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்கு செல்வார்கள்.
சபரிமலை யாத்திரையில் முக்கியமானது இருமுடி கட்டுவது. ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு செலுத்துவதற்காக எடுத்துச் செல்லும் பச்சரிசி, நெய் தேங்காய் போன்றவற்றை ஒரு முடியாகவும், வழியில் தங்களுக்கான உணவை மற்றொரு முடியாகவும் கட்டி எடுத்துச் செல்வார்கள். இதனை பாவம் ஒரு முடி, புண்ணியம் ஒரு முடி என்றும் சொல்வார்கள். சிவனின் அம்சமான தேங்காயில், மகாவிஷ்ணுவின் அம்சமான நெய்யை நிறப்பி ஒரு முடியில் வைத்து பாவ, புண்ணியங்களை சுமந்து சென்று இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
சபரிமலை மண்டல பூஜை 2022 : ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

மகா வாக்கியம் :
ஐயப்பன் கோவிலில் 18 படிகளுக்கு மேல், தத்துவமசி என்ற மகா வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. இதை தத்-துவம்-அஸி என பிரித்து படிக்க வேண்டும். " நீ எதை தேடி வந்தாயோ அது உன்னிடமே உள்ளது" என்பது தான் இதன் பொருள். ஐயப்பன் என்ற சொல்லுக்கு நான் உனக்குள் இருக்கிறேன் என்பது தான் பொருள். அனைத்து ஆன்மாவோடு கலந்துள்ள இறைவனை உணர்ந்து, இறை நிலைக்கு மனிதன் உயர வேண்டும் என்ற மகா தத்துவத்தை உணர்த்துவது தான் ஐயப்ப விரத மற்றும் வழிபாட்டின் முக்கிய அம்சமாகும்.
Sabarimala Prasadham- சபரிமலை பிரசாதம் :
நீண்ட நாட்களானாலும் கெட்டு போகக் கூடாது என ஐயப்பனுக்காக பந்தள மன்னன் எடுத்துச் சென்ற அரவனை பாயசம், உன்னி அப்பம் போன்றவைகளே தற்போது வரை சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் ஆக கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரவனை பாயசம் என்பது பச்சரிசி, வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படுவதாகவும். பக்தர்கள் இருமுடியில் கொண்டு செல்லும் தேங்காயில் உள்ள நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து, ஐயனின் திருமேனி தீண்டிய நெய்யினை பிரசாதமாக பக்தர்களுக்கு தருகிறார்கள். இந்த நெய்யான ஒரு ஆண்டு ஆனாலும் கூட அதே நறுமணம் மாறாமல் கெட்டு போகாமல் இருக்கும். இந்த நெய்யினை ஒரு மண்டலம் சாப்பிட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.
ஹரிவராசனம் பாடல் பற்றி தெரியாத ரகசியமும், முழு பாடல் விளக்கமும்

Sabarimala 18 steps – சபரிமலை 18 படி விளக்கம்
தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளிலும் 18 தேவதைகள் அருள் செய்கின்றன. இந்த 18 படிகளும் வாழ்க்கை மற்றும் 18 வகையான குணங்களை குறிப்பதாகவும், இவற்றில் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை சேர வேண்டும் என்பதே 18 படிகளின் தத்துவம். 18 படிகளில் ஏறும் போது, 18 படிகளை கடந்த ஐயப்பனை தரிசிக்கும் போதும் என்ன வேண்டிக் கொள்கிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 18 படிகள் உணர்த்தும் தத்துவம்.
முதல் படி – பிறப்பு நிலையற்றது
இரண்டாம் படி – சாங்கிய யோகம்
மூன்றாம் படி – கர்ம யோகம்
நான்காம் படி – ஞான யோகம்
ஐந்தாம் படி – சன்னியாசி யோகம்
ஆறாம் படி – தியான யோகம்
ஏழாம் படி – ஞான விஞ்ஞான யோகம்
எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்
ஒன்பதாம் படி – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
பத்தாம் படி – விபூதி யோகம்
பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்
பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்
பதிமூன்றாம் படி – சேஷத்ர விபாக யோகம்
பதினான்காம் படி – குணத்ரய விபாக யோகம்
பதினைந்தாம் படி – புருஷோத்தம யோகம்
பதினாறாம் படி – தைவாசுரஸம்பத் விபாக யோகம்
பதினேழாம் படி – ச்ராத்தாதரய விபாக போகும்
பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்
ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டல கால விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து ஒவ்வொரு படிகள் மீது ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.
Makarajyothi – மகரஜோதி :
ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி அன்று, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனின் ஆபணங்களில் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும். அப்படி நகைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும் போதும் பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவமாக ஐயப்பன் காட்சி தருவார். இந்த மகரஜோதியை காண்பது பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடியது. ஐயப்ப வழிபாட்டில் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவது மகரஜோதி தரிசனத்தை தான்.
Sabarimala Ayyappa worship history – ஐயப்ப வழிபாட்டின் தோற்றம் :
கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பந்தள தேசத்தின் மன்னனின் மகனாக ஐயப்பன் வளர்ந்த காரணத்தால் ஆரம்பத்தில் சபரிமலை யாத்திரை என்பதும், ஐயப்ப வழிபாடு என்பதும் கேரள மாநிலத்தவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு வழிபாட்டு முறையாக இருந்தது. 60 ஆண்டுகளுக்கு முன் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவர் 'ஸ்ரீ ஐயப்பன்' என்ற தலைப்பில் ஐயப்பனின் வரலாற்றையும், வழிபாட்டு முறை பற்றியும் நாடகமாக போட்டு கேரளாவை தாண்டி பிற மாநிலத்தவர்களும் ஐயப்பன் பற்றி தெரிந்து கொள்ள செய்தார்.
Mandala Poooja – கோவில் திறந்திருக்கும் நேரம் :
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்திருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சாத்தப்படும். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜைக்காக கோவில் காலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.
விழாக்கள் :
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை. தை மாதம் மகர சங்கராந்தி அன்று நடக்கும் மகரஜோதி தரிசனம், சித்திரை விஷூ போன்ற விழாக்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக சபரிமலையில் குவிகிறார்கள்.
கோவில் முகவரி :
சபரிமலை ஐயப்பன் கோவில்,
பெருநாடு கிராம பஞ்சாயத்து,
பத்தனம் திட்டா மாவட்டம் – 689662
கேரளா மாநிலம்

source