2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

கோவை, திருப்பூர், ஈரோட்டில் குவிக்கப்படும் அதிரடிப்படை – பதற்றத்தில் மாவட்டங்கள் – BBC Tamil

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் வசிக்கும் வீடுகள், அலுவலகங்களை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த மாவட்டங்களில் மத்திய அதிரடிப்படை குவிக்கப்பட்டு வருகிறது. என்ன நடக்கிறது?
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் வாழும் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இணைந்து மிகப்பெரிய சோதனையை வியாழக்கிழமை நடத்தின.
தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு சில பிஃப்ஐ தலைவர்கள் உதவி செய்ததாகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு அமைப்பில் சேர உறுப்பினராக சேருவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே கேரளாவில் 8, கர்நாடகாவில் 15, தமிழ்நாடு, உத்தர பிரதேசத்தில் 1, ராஜஸ்தானில் 2 என மொத்தம் 45 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் பதிவான இரண்டு வெவ்வேறு வழக்குககள் ஒன்றில் மூன்று பேரும் மற்றொன்றில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஃஎப்ஐ அமைப்பு முறைப்படி அரசியல் கட்சியாக பதிவாகியுள்ளது. அதன் பிரதிநிதியாக செயல்படும் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருக்கிறனர்.
RC 14/2022/NIA/DLI என்ற முதல் தகவல் அறிக்கை பதிவான வழக்கில், மொஹம்மத் அலி ஜின்னா, மொஹம்மத் யூசுஃப், ஏ.எஸ். இஸ்மாயிலும், RC 42/2022/NIA/DLI என்ற முதல் தகவல் அறிக்கை பதிவான வழக்கில் சையது இஷாக், வழக்கறிஞர் காலித் மொஹம்மத், ஏ.எம். இட்ரிஸ், மொஹ ம்மத் அபுதாஹிர், எஸ். காஜா மைதீன், யாசர் அராஃபத், பரக்கதுல்லா, ஃபயாஸ் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகளை இலக்கு வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தால் அங்கு அமைதி யற்றசூழல் காணப்படுகிறது. இதையடுத்து அந்த மாவட்டங்களுக்கு மத்திய படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கலவர காலங்களில் வன்முறையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு அங்கமான அதிவிரைவு அதிரடிப்படையின் (ஆர்ஏஎஃப்) இரண்டு கம்பெனி படையினர் இந்த மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் இருந்து இந்த மாவட்டங்களுக்கு வந்த படையினர், முதலாவதாக நகரின் முக்கிய சாலைகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பெட்ரோல் குண்டு பாட்டில்கள் எங்கெல்லாம் வீசப்பட்டன?
கோவையில் மூன்று இடங்களிலும் பொள்ளாச்சியில் இரண்டு இடங்களிலும் மேட்டுப்பாளையத்தில் ஒரு இடத்திலும் பாஜகவினருக்கு சொந்தமான பகுதிகளில் பாட்டில் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த வேளையில், பாஜகவினர் பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 'எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு காரணம்' என அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த நிலையில் கோவை மாநகரில் கல்லாமேட்டில் பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் இரவோடு இரவாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆரிஸ், இப்ராஹிம், ஜபருல்லா ஆகிய அந்த மூன்று பேர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறினர்.
ஆரிஸின் தாயார் ரஹ்மத் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இன்று அதிகாலை 3 மணி அளவில் எங்கள் வீட்டு கதவை யாரோ பலமாக தட்டினர். யார் என்று விசாரிப்பதற்குள் கதவை உடனடியாக திறக்கா விட்டால் உடைத்து விட்டு உள்ளே வருவோம் என மிரட்டினர். வீட்டு வாயிலில் நூற்றுக்கணக்கான போலீசார் இருந்தனர். என் மகன் ஆரிஸை வலுக்கட்டாயமாக அவர்கள் அழைத்துச் சென்றனர்," என்றார்.
"லுங்கி அணிந்து உறங்கிக் கொண்டிருந்தவரை ஆடை கூட மாற்ற விடாமல் பூட்ஸ் காலை வைத்து மிதித்து இழுத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் இருந்த மூன்று செல்போன்களையும் எடுத்துச் சென்று விட்டனர். தற்போது வரை அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்கிற தகவல் இல்லை. எதுவும் செய்யாத அப்பாவிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்படி ஏதாவது தவறு செய்திருந்தால் தலைமறைவு ஆகாமல் ஏன் வீட்டில் வந்து இருக்கப் போகிறார்கள்," என்றார்.
இப்ராஹிம் என்பவரை தொழுகை சென்றபோது காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாக அவரின் தங்கை சஜினா கூறுகிறார். "இப்ராஹிம் உடல்நலம் முடியாதவர் தொழுகைக்காக சென்றபோது காவல்துறையினர் எந்த தகவலும் தெரிவிக்காமல் அழைத்துச் சென்றனர்" என்றார்.
இந்த நிலையில், பிடிபட்ட மூன்று பேரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வந்துள்ள வேளையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் "கோயம்புத்தூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "கோவை மாநகரில் 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி அமைப்பின் ஆதரவாளர்கள் மதன் குமார் மற்றும் சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடையின் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை ஒருபுறம் நடந்த வேளையில்தான் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிய பாட்டில்கள், பாக்கெட்டுகளை சில இடங்களில் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
கோவை மாநகர் கரும்புக்கடை, ஆத்துப்பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம், டெலிபோன் நகரில் உள்ள பூந்துறை பிரதான சாலையில் பாஜக தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவரது மர சாமான் கடையை நோக்கியும் மர்ம நபர்கள் நான்கு டீசல் நிரப்பிய பாக்கெட்டுகளை வீசினர்.
இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து பார்த்தபோது, ஒரு டீசல் பாக்கெட்டில் ஏற்பட்ட தீயால் கடையின் ஜன்னல் அருகே தீ பிடித்திருந்தது. மற்ற மூன்று டீசல் பாக்கெட்டுகள் எரியாமல் அப்படியே கிடந்தன.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரியாமல் கிடந்த மூன்று டீசல் பாக்கெட்டுகளையும், அருகிலிருந்த தீக்குச்சிகளையும் கைப்பற்றிய போலீஸார், அவற்றை வீசிய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாஜகவினர், அந்த கடை முன்பாக பெருமளவில் திரண்டனர்.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் கோவை மாநகரின் சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை நோக்கியும் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
இரண்டு இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும், சம்பவத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இரு இடங்களிலும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசப்பட்ட பகுதிகளுக்கு அருகே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவான காட்சிகளை வைத்து, இந்த செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
© 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

source