2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து 2022: இந்தியா ஏன் பங்கேற்பதில்லை? – BBC Tamil

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது.
உலகம் முழுவதும் கால்பந்து விளையாடி வரும் 32 சிறந்த அணிகளுக்கு இடையிலான பரபரப்பான பந்தயங்களுக்குப் பிறகு கால்பந்து உலகின் மன்னர் யார் என்பது முடிவாகும்.
நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பை போட்டிகளை சுமார் 500 கோடி மக்கள் பார்ப்பார்கள் என்று உலகெங்கிலும் கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பான ஃபிஃபா கூறுகிறது.
2018 உலகக் கோப்பையின் 400 கோடி பார்வையாளர்களை ஒப்பிடும்போது இந்தமுறை மேலும் 100 கோடி பேர் இந்தப்போட்டிகளை கண்டு மகிழ்வார்கள்.
கத்தாரில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியாகும். ஆனால் இந்திய விளையாட்டுப் பிரியர்களுக்கு இதில்எந்த உற்சாகமும் இல்லை. ஏனென்றால் இதுவரை இந்தியாவால் ஒரு முறை கூட இந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
ஆனால் ஒரு காலத்தில் இந்தியா இந்தப்போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெற்றது என்பதை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஒருசில விளையாட்டு ஆர்வலர்கள் மட்டுமே அறிவார்கள்.
இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் 72 ஆண்டுகளுக்கு முன்பு 1950-ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை என்பதுதான் உண்மை.
இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942 மற்றும் 1946இல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை.
12 வருட காத்திருப்புக்குப் பிறகு 1950ல் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருந்தது. பிரேசிலில் நடைபெறவிருந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட 33 நாடுகள் மட்டுமே சம்மதம் தெரிவித்திருந்தன.
இந்தியா, பர்மா (மியான்மர்) மற்றும் பிலிப்பைன்ஸுடன் 10-வது தகுதிச் சுற்றில் இடம் பெற்றது. ஆனால் பர்மா மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் தகுதிச் சுற்றில் இருந்து தங்கள் பெயர்களை வாபஸ் பெற்றன.
அதாவது இந்தியா விளையாடாமலேயே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றிருந்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்த முதன்முறையாக இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்தது.
1950 உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிச் சுற்று டிரா தயாரிக்கப்பட்டபோது இந்தியா, ஸ்வீடன், இத்தாலி மற்றும் பராகுவேயுடன் பிரிவு 3 இல் இடம் பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்றிருந்தால், அது எப்படி விளையாடியிருக்கும்?
இதுகுறித்து மறைந்த கால்பந்து பத்திரிகையாளர் நோவி கபாடியா, உலக கோப்பை கால்பந்து வழிகாட்டி புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
"அப்போது பராகுவே அணி அதிக வலுவாக இருக்கவில்லை. ஒழுங்கீனம் காரணமாக, இத்தாலி தனது எட்டு முக்கிய வீரர்களை அணியில் சேர்க்கவில்லை. அணி மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், பயிற்சியாளர் விட்டோரியோ போஸோ பிரேசிலை அடைந்த பிறகு ராஜினாமா செய்தார். ஸ்வீடன் அணி இந்தியாவை ஒப்பிடும்போது மிகவும் நல்ல நிலையில் இருந்தது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தியா குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் அணிக்கு சிறந்த அனுபவம் கிடைத்திருக்கும்,”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1950களில் இந்திய கால்பந்து அணி சர்வதேச அளவில் அவ்வளவாக விளையாடியதில்லை. ஆனால் நல்ல விளையாட்டை விளையாடும் அணி என்ற நற்பெயரை அது கொண்டிருந்தது.
1948 லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய அணியின் விளையாட்டு இதை நிரூபித்தது. பிரான்ஸ் போன்ற வலுவான அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் மட்டுமே இந்தியா தோல்வியடைந்தது.
அந்த காலகட்டத்தில், ஃபார்வேர்ட் மற்றும் டிரிப்லர் விளையாட்டின் மூலம் இந்திய கால்பந்து அணி, தனது அடையாளத்தை உருவாக்க முயற்சித்தது.
அகமது கான், எஸ்.ரமன், எம்.ஏ.சத்தார், எஸ்.மேவாலால் போன்ற வீரர்களுக்கு பல ரசிகர்கள் இருந்தனர்.
லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அனைவரும் வெறுங்காலுடன் கால்பந்து மைதானத்தில் களமிறங்கினர்.
எனினும் Right Back இல் விளையாடிய தாஜ் முகமது பூட்ஸ் அணிந்து விளையாடினார்.
1950 உலகக் கோப்பையில் இந்திய கால்பந்து அணி ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கு தெளிவான பதில் இல்லை.
அணியின் தேர்வு தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் பயிற்சிக்கு போதுமான நேரம் இல்லாததால் அணி தனது பெயரை விலக்கிக்கொண்டது என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) அளித்த அதிகாரப்பூர்வ காரணம் தெரிவிக்கிறது.
ஆனால் பல ஆண்டுகள் இது பற்றி விவாதங்கள் நடந்தன. இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் கால்பந்து விளையாட விரும்பினர் என்றும் ஃபிஃபா அதை ஏற்கவில்லை என்றும் அதிகம் பேசப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய கால்பந்து அணியின் இரண்டு வீரர்கள் எஸ் மேவாலால் மற்றும் எஸ் நந்தி வெறுங்காலுடன் பயிற்சி செய்கின்றனர்.
மூத்த விளையாட்டுப் பத்திரிக்கையாளர் ஜெய்தீப் பாசுவின் சமீபத்திய புத்தகமும் இந்தக் காரணத்தை மிகவும் நம்பகமானதாகக் கருதவில்லை.
ஜெய்தீப் பாசு தொகுத்துள்ள 'பாக்ஸ் டு பாக்ஸ்: 75 இயர்ஸ் ஆஃப் தி இந்தியன் ஃபுட்பால் டீம்' என்ற புத்தகத்தில், "இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் விளையாடுவதை ஃபிஃபா ஆட்சேபித்த கேள்விக்கே இடமில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"அந்த அணியில் இருந்த ஏழு-எட்டு வீரர்கள் தங்கள் பயணப் பைகளில் ஸ்பைக் பூட்ஸை வைத்திருந்தனர். வெறுங்காலுடன் விளையாடுவது வீரர்களின் சொந்த விருப்பம்,"என்று லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஏழு-எட்டு வீரர்களை மேற்கோள் காட்டி ஜெய்தீப் பாசு எழுதியுள்ளார்.
கால்பந்து வீரர்கள் தங்கள் காலில் தடிமனான துணிப்பட்டையை கட்டிக்கொண்டு விளையாட விரும்பிய காலம் அது. இந்தப்போக்கு 1954 வரை உலகின் பல நாடுகளிலும் இருந்தது.
இந்திய அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்காததற்கு பொருளாதாரமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் இந்தக் கூற்றிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.
பிரேசில் செல்வதற்கான செலவுகளில் சிக்கல் இருந்தது, ஆனால் அது தீர்க்கப்பட்டது என்று ஜெய்தீப் பாசு தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
இந்தியாவின் மூன்று மாநில அளவிலான கால்பந்து சங்கங்கள் செலவில் பங்களிக்க உறுதியளித்ததாக அவர் எழுதியுள்ளார்.
இது மட்டுமின்றி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரேசில், இந்திய கால்பந்து சங்கத்தை அணுகி, அணியின் பெரும்பாலான செலவுகளை ஏற்றுக்கொள்ள உறுதியளித்ததாக நோவி கபாடியா தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
”பிரேசிலின் இந்த நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், துருக்கி மற்றும் செக்கோஸ்லோவாக்கியா அணிகளும் கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து தங்கள் பெயர்களைத் திரும்பப் பெற்றன. இரண்டாவதாக, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் நாட்டைச்சேர்ந்த அணி, தனது நாட்டில் கால்பந்து விளையாடவேண்டும் என்று பிரேசில் விரும்பியது,” என்று நோவி கபாடியாவின் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
1950 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி இந்தியா உலகக் கோப்பைக்கு செல்லும் அணியை அறிவித்தது என்று ஜெய்தீப் பாசுவின் புத்தகம் கூறுகிறது. இந்தியாவின் முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, இந்திய அணி ஜூன் 15 அன்று பிரேசிலுக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். மேலும் இந்தியா தனது முதல் பந்தயத்தை ஜூன் 25 அன்று பராகுவேவுக்கு எதிராக விளையாட இருந்தது.
ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது இந்திய கால்பந்து உலகின் மிகப்பெரிய மர்மம் என்று ஜெய்தீப் பாசு கூறுகிறார். இதற்கு எந்த தெளிவான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.
இருப்பினும் அந்தக்காலகட்டத்தின் இந்திய கால்பந்து வீரர்களோ அல்லது கால்பந்து அதிகாரிகளோ இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை என்பது நோவி கபாடியா மற்றும் ஜெய்தீப் பாசுவின் புத்தகங்களிலிருந்து தெளிவாகிறது.
அந்த நேரத்தில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளின் சாம்பியன் அணியாக மாறியது. மேலும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் புகழின் இறுதி அளவுகோல் ஒலிம்பிக் போட்டியாக இருந்தது.
அத்தகைய சூழ்நிலையில் இந்திய கால்பந்து அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் விளையாட்டை நடத்தும் அமைப்புகள் ஆகிய இருதரப்புமே, ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தின.
இது தவிர 1951ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் டெல்லியில் நடைபெறவிருந்தது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது.
1950 வரை உலகக் கோப்பை கால்பந்தாட்டம் அவ்வலவு பிரபலமாக இருக்கவில்லை. உலக அளவில் அதன் பிரபலம் பின்னர்தான் அதிகரிக்கத்தொடங்கியது என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அப்போதுவரை அது ஒரு வசீகரமான விளையாட்டுப் போட்டியாகவே கருதப்பட்டது.
விதிகள் பற்றிய அறிவு இல்லாததால், இந்தியாவின் கால்பந்து அதிகாரிகள் இத்தகைய முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.
உலகக் கோப்பை கால்பந்தில் பங்கேற்கும் வீரர்கள் அப்போது தொழில்முறை வீரர்களாக கருதப்பட்டனர்.
தொழில்முறை வீரர்களாக இருப்பவர்கள் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் அமெச்சூர்களாக இருக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்த விதியிலும் ஓட்டைகள் இருந்தன. உலகக் கோப்பை கால்பந்தில் பங்கேற்கும் வீரர்கள் ராணுவத்தின் உறுப்பினர்கள் என்றும் ராணுவ உறுப்பினர்கள் தொழில்முறையினராக இருக்க முடியாது என்றும் ஹங்கேரி, ரஷ்யா மற்றும் பிற சோஷியலிச நாடுகள் கூறின.
ஆனால் அந்த நேரத்தில் இந்திய கால்பந்து அதிகாரிகளுக்கு இந்த அளவு அறிவுஞானம் இருக்கவில்லை என்று தோன்றுகிறது.
ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இந்திய கால்பந்து சங்கம், 1950 உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்திருக்கலாம்.
ஆனால் இந்த முடிவு ஒரு மாபெரும் தவறு என்று நிரூபணமானது. இது கடந்த 72 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களை வருத்தி வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின்போது இந்த வருத்தம் மேலும் அதிகமாகிறது.
கால்பந்து கிராமம்: எங்க ஊருக்கு இது தேசிய விளையாட்டு மாதிரி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
© 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

source