2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

அரையிறுதியில் இந்தியா தோல்வி * பைனலில் இங்கிலாந்து–பாக்., – Dinamalar

அடிலெய்டு: ‘டி-20’ உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பட்லர், ஹேல்ஸ் இணைந்து இந்திய பவுலர்களை வெளுத்து வாங்க, இங்கிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. அடிலெய்டில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் காயமடைந்த மலான், மார்க் உட்டுக்குப் பதில் பில் சால்ட், ஜோர்டான் சேர்க்கப்பட்டனர்.

கைவிட்ட துவக்கம்

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்டோக்ஸ் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்த ராகுல், 5 ரன் மட்டும் எடுத்து அவுட்டாகி, அதிர்ச்சி கொடுத்தார். மறுபக்கம் ரோகித், ஒருநாள் போட்டி போல சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ‘பவர்பிளே’ ஓவர் (6) முடிவில் இந்தியா 38/1 ரன் மட்டும் எடுத்தது. ரோகித் 28 பந்தில் 27 ரன் மட்டும் எடுத்த ரோகித், ஜோர்டானிடம் வீழ்ந்தார்.

கோஹ்லி அரைசதம்

வந்த வேகத்தில் ஸ்டோக்ஸ் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த சூர்யகுமார் (14), ரஷித் சுழலில் சிக்கினார். பின் கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா இணைந்து அணியை மீட்க போராடினர். லிவிங்ஸ்டன் ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடிக்க இந்திய அணி 15 ஓவரில் 100/3 ரன் எடுத்தது. கோஹ்லி (50) அரைசதம் அடித்து அவுட்டானார். ரிஷாப் பன்ட் (6) நிலைக்கவில்லை.

பாண்ட்யா ஆறுதல்

கடைசி நேரத்தில் நம்பிக்கை தந்த பாண்ட்யா, சிக்சர்களாக விளாசினார். இவர் 29 வது பந்தில் அரைசதம் விளாசினார். கர்ரான் வீசிய 19 வது ஓவரில் 20 ரன் எடுக்கப்பட்டன. ஜோர்டானின் கடைசி பந்தில் பாண்ட்யா (63) ‘ஹிட்’ விக்கெட் முறையில் வீழ்ந்தார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.

மோசமான பவுலிங்

இங்கிலாந்து அணிக்கு பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் சிக்சர், பவுண்டரி என விளாசினர். சராசரி ரன் ரேட் 10.00க்கும் மேல் செல்ல, இங்கிலாந்து அணி 10.1 ஓவரில் 104 ரன் குவித்தது. இருவரும் அரைசதம் விளாச, வெற்றியை வேகமாக நெருங்கியது இங்கிலாந்து.

பவுலர்களை மாற்றிய போதும், கடைசி வரை துவக்க ஜோடியை பிரிக்க முடியவில்லை. இங்கிலாந்து அணி 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 170 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லர் (80), ஹேல்ஸ் (86) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது.

‘பவர்பிளே’ சொதப்பல்

நேற்று ‘பவர்பிளேயில்’ இந்திய அணி 38/1 ரன் (6 ஓவர்) மட்டும் எடுத்து பெரிய பின்னடைவானது. இங்கிலாந்து அணி 6 ஓவரில் 63/0 ரன் குவித்தது.

* 12 ஓவருக்குப் பின் அடிப்பதை இந்திய வீரர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நேரத்தில் சூர்யகுமார் அவுட்டாகி விட்டால் அவ்வளது தான், இந்திய அணியின் ஸ்கோர் 150 ரன்களை எட்டுவதே சிரமம் ஆனது.

* இங்கிலாந்து பேட்டிங்கில் புவனேஷ்வர், அர்ஷ்தீப் சிங் தலா 2 ஓவர் மட்டும் வீசியிருந்தனர். ‘மிடில் ஓவர்களில்’ விக்கெட் விழாத நிலையில், இவர்களை சரியான நேரத்தில் ரோகித் பயன்படுத்தாததும், இந்தியா தோல்விக்கு காரணம் ஆனது.

ஏமாற்றிய ‘டாஸ்’

அடிலெய்டு மைதானத்தில் முதலில் நடந்த 11 போட்டியிலும் ‘டாஸ்’ வென்ற அணி வெற்றி பெற்றது இல்லை. நேற்று இந்த ராசி இந்தியாவிடம் எடுபடவில்லை. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

* கடந்த 2011க்கு பின் இம்மைதானத்தில் இங்கிலாந்து பங்கேற்ற 6 போட்டியிலும் தோற்றது. 11 ஆண்டுக்குப் பின் இங்கு நேற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

பைனலில் இங்கிலாந்து-பாக்.,

மெல்போர்ன் மைதானத்தில் நவ. 13ல் நடக்கவுள்ள பைனலில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 30 ஆண்டுக்கு முன் (1992), இதே மைதானத்தில் நடந்த உலக கோப்பை தொடர் (50 ஓவர்) பைனலில் இந்த இரு அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி (249/6), இங்கிலாந்தை (227/10) சாய்த்து கோப்பை வென்றது.

மூன்றாவது முறை

‘டி-20’ உலக கோப்பை தொடரில் 2010, 2016க்குப் பின், இங்கிலாந்து அணி மூன்றாவது முறையாக (2022) பைனலுக்கு முன்னேறியது. இதில் 2010ல் மட்டும் கோப்பை வென்றது. 2016ல் வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது.

3

‘டி-20’ உலக கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று அரையிறுதியில் அரைசதம் அடித்த முதல் வீரர் ஆனார் இந்தியாவின் கோஹ்லி. இவர், 2014ல் 72 (எதிர்-தெ.ஆப்.,), 2016ல் 89 (வெ.இண்டீஸ்), நேற்று 50 ரன் (இங்கிலாந்து) என விளாசினார்.

8

இங்கிலாந்து அணிக்கு எதிரான ‘டி-20’ போட்டியில் 8 ஆண்டுக்குப் பின் பங்கேற்றார் இந்திய வீரர் அஷ்வின். இதற்கு முன் 2014ல் பர்மிங்காம் போட்டியில் விளையாடி இருந்தார்.

170

நேற்று பட்லர், ஹேல்ஸ் இணைந்து 170 ரன் விளாசினார். ‘டி-20’ உலக கோப்பை தொடரில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. இதற்கு முன் வங்கதேசத்திற்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ரூசோவ் ஜோடி 168 ரன் எடுத்ததே அதிகம்.

296

ஆஸ்திரேலிய ‘டி-20’ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்-12’ சுற்றில் அதிக ரன் எடுத்த வீரர்களில் இந்தியாவின் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டியில் 296 ரன் எடுத்தார். அடுத்த இரு இடத்தில் இந்தியாவின் சூர்யகுமார் (239 ரன்), நியூசிலாந்தின் பிலிப்ஸ் (201) உள்ளனர்.

4000

சர்வதேச ‘டி-20’ ல் 4000 ரன் எடுத்த முதல் வீரர் ஆனார் இந்தியாவின் கோஹ்லி. இவர் 115 போட்டியில் 1 சதம், 37 அரைசதம் உட்பட மொத்தம் 4008 ரன் எடுத்தார்.

இதில் ‘டாப்-3’ வீரர்கள்

வீரர்/அணி போட்டி ரன் 100/50

கோஹ்லி/இந்தியா 115 4008 1/37

ரோகித்/இந்தியா 148 3853 4/29

கப்டில்/நியூசி., 122 3531 2/20

Home கருத்தைப் பதிவு செய்ய
மேலே செல்ல ↑
All Rights Reserved

source