2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

அரசியலமைப்புச் சட்டம் பாகம் 4.. எந்தெந்தப் பிரிவுகள் என்னென்ன சொல்கிறது? – டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா! – Vikatan

Save the vikatan web app to Home Screen tap on
அரசியலமைப்புச் சட்டம் பாகம் 4.. எந்தெந்தப் பிரிவுகள் என்னென்ன சொல்கிறது? – டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!
அரசியலமைப்புச் சட்டம் பாகம் 4.. எந்தெந்தப் பிரிவுகள் என்னென்ன சொல்கிறது? – டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!
இந்திய அரசமைப்புச் சட்டம் பாகம் IV. வழிகாட்டு நெறிமுறைகள். 
உலகம் எங்கும் ஏராளமான நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே சட்டமும் அரசாங்கமும் கூட இருக்கத்தான் செய்கின்றன. இவர்கள் எல்லாரிடமிருந்தும் இந்தியா தனித்து நிற்கிறது. அதற்குக் காரணம், நமது ஜனநாயகம்; அரசமைப்புச் சட்டம். வேறு எதையும் விட மக்கள் நலன்தான் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறது சாசனம். இதற்காகச் சில வழிகாட்டு முறைகளைள் பட்டியலில் இருக்கிறது. அதுதான் சாசனத்தின் பாகம் IV. 
பிரிவு (Article) 36 தொடங்கி 51 வரை பாகம் நான்கில் அடங்கும். ஒருவர் மீது நீதிமன்றத்தில் ஏதோ ஒரு வழக்கு இருக்கிறது; அவரோ ஏழை; ‘வக்கீல்’ வைத்து வாதாடுகிற அளவுக்குப் பண வசதி இல்லை. பிறகு எப்படி அவருக்கு நீதி கிடைக்கும்…? இத்தகைய வறிய நிலையில் இருக்கிறவர்களுக்கு, அரசாங்கம் இலவச சட்ட உதவி வழங்க வேண்டும் என்கிறது பிரிவு 39A. எந்தக் குடிமகனுக்கும் தகுந்த நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை என்பதே சாசனம் காட்டும் நெறி. 
”இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் உள்ளது”. (மகாத்மா காந்தி) ஆகவே ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால், கிராம நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதனால்தான், கிராமப் பஞ்சாயத்துகள், சுய ஆட்சி அமைப்புகளாகச் செயல்பட வழி வகுக்கிறது பிரிவு 40. இவ்வமைப்புகளுக்குத் தேவையான அனைத்து அதிகாரங்களையும், மாநில அரசு வழங்க வேண்டும் என்கிறது இப்பிரிவு. வேலையற்ற பட்டதாரிகளுக்கு மானியம் / நிதி உதவி தருகிறது அரசு. இவர்களுக்கு மட்டுமல்ல; முதியோருக்கு, உடல் நலிவுற்றோருக்கு, ஆதரவற்றோருக்கு… எனப் பல பிரிவினருக்கு அரசாங்கம், உதவி செய்கிறதுதானே…? இதை எல்லாம் அரசின் கடமையாகப் பட்டியல் இடுகிறது பிரிவு 41. மகப்பேறு மானியம் வழங்க வகை செய்கிறது பிரிவு 42. தொழிலாளர்கள், உழைப்பாளர்கள், பாட்டாளி வர்க்கத்தினர், குறைந்த பட்சம், வாழ்வதற்குத் தேவையான அளவுக்கேனும் கூலி பெறுவதை உறுதி செய்கிறது பிரிவு 43. அளவுக்கு அதிகமாக வேலை வாங்கிக் கொண்டு சொற்ப கூலி கொடுத்து பிறரின் உழைப்பைப் பிறர் சுரண்டுவதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது இப்பிரிவு. 
தொழிற்சாலைகளின் நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் என்று வாதிடுகிறது பிரிவு 43A. (42வது திருத்தம்) கூட்டுறவு இயக்கத்தை ஆதரிக்கிறது பிரிவு 43B. நாடு முழுதும் ஒரே மாதிரியான சட்டம் (Uniform Civil Code) கொண்டு வர அரசு பாடுபடும் என்கிறது பிரிவு 44. (தேர்வுக்காக மட்டுமே இதனைக் குறிப்பிடுகிறோம்). குழந்தைக் கல்வி, குழந்தைப் பராமரிப்பை வலியுறுத்துகிறது பிரிவு 45. பட்டியல் இனம், பட்டியல் மரபினர் மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் கல்வி, பொருளாதாரத்துக்குப் பாடுவதை அரசின் கடமையாக முன் வைக்கிறது பிரிவு 46. பொதுச் சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்துள்ள உணவு வழங்குவதை வலியுறுத்துகிறது பிரிவு 47. நவீன முறை வேளாண்மை, கால்நடைப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தருகிறது பிரிவு 48. காடுகள், காட்டு விலங்குகளுக்குப் பாதுகாப்பு நல்குகிறது பிரிவு 48A. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது பிரிவு 49. அரசு நிர்வாகத்தை விட்டுத் தனியே, சுதந்திரமாக, சுயேச்சையாக நீதி நிர்வாகம் (நீதிமன்றங்கள்) இயங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்கிறது பிரிவு 50. சர்வதேச பாதுகாப்பு, அமைதியை மேம்படுத்த அரசு பாடுபடும் என்கிறது பிரிவு 51.
மேலே உள்ள பட்டியலை, ஒருமுறைக்கு இருமுறை படித்து வைத்துக் கொள்ளவும். மனப்பாடம் செய்து கொள்ள அவசியம் இல்லை.  என்னவெல்லாம் அரசின் நெறிமுறைகளாக, சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் போதுமானது. இவை எல்லாம் அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகள்.  இந்தப் பட்டியலைப் படிக்கிற போது என்ன தோன்றுகிறது…? சமீபத்திய நிகழ்வுகள் ஏதேனும் நினைவுக்கு வருகிறதா…? 
தாஜ்மகால் – ஒரு தேசிய சின்னம்தானே…? அதனை முறையாகப் பராமரிப்பது, பாதுகாப்பது – பிரிவு 49இன் கீழ், அரசின் கடமை ஆகிறது. இவ்வாறாக நாட்டில் நடக்கும் எந்த ஒரு சம்பவம், விவாதத்தையும் அரசமைப்புச் சட்டத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும். குரூப்4 தேர்வுக்கு அவசியம் இல்லை; பிற போட்டித் தேர்வுகளில், சம்பவங்கள் அல்லது வழக்குகளைக் குறிப்பிட்டு, அத்துடன் தொடர்புடைய பிரிவு (Article) பற்றிக் கேட்கலாம். கவனத்தில் கொள்ளவும். பாகம் IV வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய மிக முக்கியமான ஒரு குறிப்பு, தொடக்கத்தில், பிரிவு 37இல் தரப்பட்டிருக்கிறது. அது என்ன என்று தெரிந்து கொண்டால்தான், இந்த பாகம் முற்று பெறும். 
இந்தப் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் எதையும், நீதிமன்றத்தின் மூலம், சட்டப்படி, கட்டாயப் படுத்த முடியாது. (“the provisions contained in this Part shall not be enforceable by any court”) சாசனத்தில் உள்ள வாக்கியத்தை அப்படியே தந்துள்ளோம். புரிந்து இருக்குமே…! 
வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஓர் அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை எனில், அரசின் மீது வழக்கு தொடுத்து, இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. ‘நமக்கு விதித்தது இவ்வளவுதான்…!’ என்று நொந்து கொண்டு போக வேண்டியதுதான். வாக்கு (ஓட்டு) அளிக்கும் போது எந்த அளவுக்குச் சிந்தித்துப் பார்த்து அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பது இப்போது புரிகிறதா…? 
ஆமாம்…. அரசாங்கத்துக்கு மட்டும்தான் கடமைகள் உள்ளனவா…? தனி மனிதனுக்கு என்று எந்தக் கடமையும் இல்லையா…? ஏன் இல்லை…? அதற்குத்தான் இருக்கிறது – பாகம் IV-A. குடிமகனின் கடமைகள். அது பற்றி நாளை விரிவாகப் பார்க்கலாம். இந்தத் தொடரின் மற்ற பாகங்களைப் படிக்க இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க!

source