2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு: ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் வார்த்தை போர் – BBC Tamil

பட மூலாதாரம், AIADMK OFFICIAL
அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை11ஆம் தேதி நடைபெறும் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக செயல்படுகிறது முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணி. மற்றொரு புறம், பொதுக்குழு கூடுவதற்கு அறிவிப்பு கொடுத்துள்ளது செல்லாது என்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இருந்தால்தான் அந்த கூட்டத்தை நடத்தமுடியும் எனவும் ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்தால், அதிமுக பொதுக்குழுவை இணையத்தில் நடத்துவது பற்றிய ஆலோசனையிலும் இபிஎஸ் அணியினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்பதில் தீவிரமாக இருக்கும் ஓபிஎஸ் அணி, வருகிற ஜூலை 11ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழு சட்டத்திற்கு புறம்பானது என்கிறது.
ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தலைமை கழகம் என பெயரில் அழைப்பு விடுத்ததே தவறு என்கிறார். ''அதிமுகவின் சட்டவிதிகள்படி கட்சியின் பொருளாளருக்கு மட்டும்தான் பொதுக்குழு கூட்டுவது உள்ளிட்ட கட்சியின் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் உரிமை உள்ளது. தலைமை கழகம் என்ற பெயரில், பொதுக்குழு கூட்ட அழைப்பது சரியல்ல. எந்த அடிப்படையில் பொதுக்குழு கூடும். அவை தலைவரை தேர்வு செய்தது கூட செல்லாது. பொதுக்குழு கூடவேண்டும், பொது செயலாளர் பதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது,''என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசிய சில மணிநேரத்தில், இபிஎஸ் தரப்பில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர், ஜூலை 11ம் தேதி திட்டமிட்டுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடத்தை ஆய்வு செய்து பேட்டியளித்தார்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்சியின் பொதுச்செயலாளர்களாக இருந்தனர். அவர்கள் வகித்த பதவியில் என்ன அதிகாரம் அவர்களுக்கு இருந்ததோ, அதே அதிகாரங்களை கொண்ட பொதுச்செயலாளர் பதவியை ஜூலை 11ம் தேதி கூடும் பொதுக்குழு உருவாக்கும். அதோடு, அந்த பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கும் தீர்மானமும் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் செல்லாது என வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் பேசி ஓபிஎஸ் அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த கூட்டம் நடத்துவது சட்டப்படி செல்லும், அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அதில் எடுக்கப்படும் தீர்மானங்களும் செயல்பாட்டிற்கு வரும்,''என தெரிவித்தார்.
இபிஎஸ் அணியில் உள்ள நத்தம் விஸ்வநாதனின் கூற்றை பற்றி மாற்று கருத்தை வைக்கிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி.
''மாவட்ட செயலாளர்கள் மட்டும்தான் இபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால்,
கட்சியில் பெரும்பாண்மையான தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். ஒருகோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள் என்பதால், அதிமுகவில் பொதுச்செயலர் பதவிக்கு ஒருவரை பொது குழு மட்டுமே சேர்ந்து தேர்வு செய்யமுடியாது. கட்சியின் விதிப்படி, ஐந்து ஆண்டு காலம் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் செல்லும் என்பதால், பொது குழு கூடி அந்த பதவிகளுக்கு பதிலாக பொதுச் செயலாளரை தேர்வு செய்கிறோம் என்று சொல்லமுடியாது,''என்கிறார் புகழேந்தி.
ஆனால், இபிஎஸ் அணியில் இருப்பவர்கள் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதால், அந்த பதவிகள் செல்லாது என்றும் தற்போது கட்சியில் அதிகாரம் படைத்திருக்கும் அமைப்பு தலைமை கழக நிர்வாகிகள் மட்டும்தான் என்கிறது.
ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு அணிகளாக பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் பலம் குறைந்துள்ளது, இதனால் பயன்பெறுபவர்கள் திமுக மற்றும் பாஜகவாக இருப்பார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் விஜய் ஷங்கர்.
''இரண்டு தரப்பினரும் சட்டவிதிபடி செயல்படுவதாக சொல்கிறார்கள். இவர்கள் மத்தியில் நிலவும் பெரும் குழப்பத்தில் பயன்பெறுபவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சியாக இருக்கும் பாஜகதான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர், திமுக கட்சி என்பதைவிட கருணாநிதியின் மீதான வெறுப்பை முன்னிறுத்தி தொண்டர்களை ஈர்த்தார்கள். தற்போது ஸ்டாலின் மீது அந்த வெறுப்பு அரசியலை அதிமுகவில் பொறுப்புக்கு வருபவர்கள் திணிக்கமுடியாது. ஒருசிலர், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறலாம். ஒரு சில சாதி வாக்குவங்கியை பாஜக ஒரு சில காலத்தில் தங்களுக்கான வாக்குகளாக மாற்றலாம். அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், தலைமை பொறுப்பைப் பெற வேண்டும் என எண்ணிய சசிகலா, தற்போது இபிஎஸ் என இருவரும் தங்களுக்கான வாய்ப்புகளை பற்றி யோசிக்கிறார்கள். அதிமுக என்ற கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு அவர்களின் வாக்குவங்கியை சீர்குலைக்கும். அதோடு, எதிர்கட்சிக்கு பலம் சேர்க்கும் என்பதை அவர்கள் கருத்தில் வைத்துள்ளனரா என்று தெரியவில்லை,''என்கிறார்.
மேலும் அதிமுகவின் பிளவு என்பது தமிழக அரசியலில் தனிப்பெரும்பான்மை கட்சிகள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைக்கும் என்கிறார் விஜய் ஷங்கர். ''தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் அனைத்து சாதி ஓட்டுகளை தங்களது கூட்டணி கட்சிகள் மூலமாக பெறுகிறார்கள். தற்போது அதிமுகவின் பிளவு மேலும் அந்த ஓட்டுகளை பிரிக்கிறது. அதாவது திமுக, அதிமுக என இரண்டு பெரிய கட்சிகள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பது என்பது சாத்தியமாகாது என்றுதான் தோன்றுகிறது,''என்கிறார் விஜய்ஷங்கர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
© 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

source